முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டி உள்ள கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பக பகுதியில் இரண்டு யானைகள் ஆக்ரோஷமாக சுற்றுலா பயணிகளின் வாகனங்களை துரத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டி கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகம் உள்ளது. இந்த வழியாக மைசூர், பெங்களூர் போன்ற நகரங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
அப்பகுதியில் நேற்று மாலை வழக்கம்போல சுற்றுலா பயணிகள் வந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலை ஓரத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த இரண்டு காட்டு யானைகள் திடீரென பிளிறிய படி சத்தம் எழுப்பிக் கொண்டே சுற்றுலா பயணிகளின் வாகனத்தை வேகமாக துரத்தியது.
இதையடுத்து இரண்டு யானைகள் துரத்துவதை பார்த்த வாகன ஓட்டிகளும், சாதுரியமாக வாகனங்களை பின்நோக்கி இயக்கினர். நீண்ட நேரமாக இரண்டு யானைகளும் வாகனங்களை துரத்திய நிலையில் ஒரு கட்டத்தில் அதுவாகவே ஒன்றன் பின் ஒன்றாக வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் சுற்றுலா பயணிகள் எந்த வித சேதமும் இல்லாமல் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
இந்த காட்சிகளை கேரள சுற்றுலா பயணிகள் தங்கள் செல்போனில் பதிவு செய்தனர். இந்த வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.