கோவையில் ஆதரவற்றோர் காப்பகத்தில் உள்ள குழந்தையை கொடூரமாக பெல்டால் அடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
கோவை மாவட்டம், சர்க்கார் சாமகுளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டை பாளையம் பகுதியில் கிரேசி ஹேப்பி ஹோம் டிரஸ்ட் என்ற பெயரில் தனியார் காப்பகம் இயங்கி வருகிறது. அங்கு தாய். தந்தை இல்லாத 26 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அங்கு தங்கி இருக்கும் ஒரு குழந்தையை கொடூரமாக ஒரு நபர் தாக்குவது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த குழந்தையை சரமாரியாக தாக்கும் போது அங்கு சுற்றி இருந்த குழந்தைகள் அதை பார்த்து அச்சமடைந்த நிலையில் உள்ளனர்.
குழந்தையை தாக்கும் போது இரண்டு பெண்கள் அங்கு இருந்தும் குழந்தையை அடிப்பதை பாதுகாக்க பெரிய அளவில் முயற்சிகள் எதுவும் எடுக்கவில்லை என்பது தெரிகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் . மேலும் கோவையின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகங்களில் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிகை எழுந்துள்ளது.
இந்நிலையில் சிறுவனை தாக்கியவர்கள் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தாக்குதல் நடத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.