அலங்கார வளைவு கட் விழுந்த விபத்தில் அந்த வழியாக சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வாகனம் நூலிழையில் தப்பித்தது.
அடுத்தாண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ’மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எனும் பெயரில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 16) முதல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
செங்கம் பகுதிக்கு இன்று வந்த அவரை வரவேற்று வழிநெடுகிலும் பிரம்மாண்ட கட் அவுட்கள், பேனர்கள், அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டிருந்தன.
அதன்படி இன்று அவர் பயணித்த பேருந்து வந்துக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சாலையில் வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு சட்டென சரிந்து விழுந்தது.
நல்வாய்ப்பாக நூலிழையில் எடப்பாடி பழனிசாமி பயணித்த பேருந்து தப்பித்த நிலையில், அதன்பின்னர் வந்த கார்கள் மீது விழுந்ததில் அவை சேதமடைந்தன.
எனினும் யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில், விழுந்த பேனர்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு எடப்பாடி பழனிசாமி தனது பயணத்தை தொடர்ந்தார்.