ரஷ்யாவில் இன்று (ஜூலை 30) ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கத்திற்கு நடுவிலும், நோயாளிக்கு மேற்கொண்ட அறுவைசிகிச்சையை நிறுத்தாமல், வெற்றிகரமாக மருத்துவர்கள் நிறைவேற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பசிபிக் பெருங்கடலில் ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் அளவில் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று காலை 8.30 மணியளவில் ஏற்பட்டது. இதனால் ரஷ்யா, ஜப்பான், அமெரிக்காவின் ஹவாய் தீவுகள், சீனாவின் சில கடற்கரை பகுதிகள் என பரந்துபட்ட அளவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதனையடுத்து சில இடங்களில் 3 முதல் 5 அடி உயரத்திலான சுனாமி பேரலைகள் தாக்கியுள்ளன.
இந்த பயங்கர சம்பவங்களுக்கு நடுவே, தங்களது உயிரினும் மேலாக கருதி, நோயாளிக்கு அறுவைசிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரஷ்யாவின் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி பகுதியில் உள்ள மருத்துவமனையில் இன்று ஒரு நோயாளிக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வந்தனர். அப்போது 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆனால் சிறிதும் பதறாது, நோயாளியை இறுக்கமாக பிடித்துக்கொண்ட மருத்துவர்கள் அங்கிருந்து நகரவில்லை. பின்னர் நிலநடுக்கம் நின்றதும், தொடர்ந்து நோயாளியிக்கு மேற்கொண்ட அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளனர். இதனை அந்நாட்டு சுகாதரத்துறையும் உறுதி செய்துள்ளது.
ஆபத்தையும் மீறி, துணிச்சலுடனும், அர்ப்பணிப்புடனும் நோயாளிக்கு சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.