கரூரில் நடிகர் விஜய் கலந்து கொண்ட தவெக பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்காதது ஏன் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களில் சிலரும் அது குறித்த கேள்விகளை எழுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் தனது எக்ஸ் பதிவில் விளக்கம் அளித்துள்ளது.
அதில், “கரூர் கூட்ட நெரிசலில் சிக்கியவர்களை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை என்று பரவும் வதந்தி !
கரூரில் தவெக பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தின் அருகே அமைந்துள்ள அக்ஷயா மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்டவர்களை அழைத்து செல்லவில்லை என்று சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது.
கூட்ட நெரிசலில் சிக்கியவர்களில் 11 பேர் அக்ஷயா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். ஆனால், அங்கு 6 ஐசியு படுக்கைகள் மட்டுமே இருந்துள்ளன. குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவர் பற்றாக்குறை காரணமாக அரசு மருத்துவர்களும் அங்கு சென்றுள்ளனர். அக்ஷயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 5 பேர் தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அவர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதி காசோலை மூலம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், பாதிக்கப்பட்டவர்களை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கவில்லை என்று சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.” என கூறப்பட்டுள்ளது.