“தெய்வீகத்தை நிராகரிக்கக் கூடிய மக்கள் தமிழ் மக்கள் இல்லை.. நாம எல்லா மதத்துக்கும் மரியாதை கொடுக்க வேண்டியவர்கள்” என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
டெல்லியில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இல்லத்தில் பெரும்பிடுகு முத்தரையர் நினைவு தபால் தலை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுகையில், தமிழகத்தின் இதயப் பகுதியை 45 ஆண்டுகாலம் தோல்வியே காணாமல் ஆண்ட மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர்; 16 போர்களில் பங்கேற்று ஒரு போரில் கூட தோல்வி அடையாத மகத்தான மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் என புகழாரம் சூட்டினார்.
இதில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், துணை ஜனாதிபதி போன்ற உயர்ந்த பதவிகள் தமிழர்களுக்கு மோடி மூலம் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. தெய்வீகத்தை நிராகரிக்கக் கூடிய மக்கள், தமிழ் மக்கள் இல்லை. அதனால நாம எல்லோருக்கும் மரியாதை கொடுக்க வேண்டியவர்கள். எல்லா மதத்துக்கும் மரியாதை கொடுக்க வேண்டியவர்கள். இந்த மாதிரி ஒரு பேரரசை (பெரும்பிடுகு முத்தரையர்) எல்லோருக்கும் சொல்ல வேண்டிய வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது. இதை ஊர் ஊராக எல்லார்கிட்டயும் சொல்லி பேசனும். மோடி அரசின் மூலமாக இதில் (தபால் தலை வெளியீட்டு) நடந்த ஒரு சிறு முயற்சியையும் எடுத்துச் சொல்ல வேண்டும். ரொம்ப நன்றி.. வணக்கம்” என்றார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசுகையில், பெரும்பிடுகு முத்தரையர் தபால் தலை வெளியிட அனுமதித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். இதில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
