துணைவேந்தர்கள் நியமன வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. பதில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்க வகை செய்யும் சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. இதன் அடிப்படையில் இந்த சட்டத்தை தமிழ்நாடு அரசும் அரசிதழில் வெளியிட்டது.
தமிழ்நாடு அரசின் இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என நெல்லை வெங்கடாஜலபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், துணைவேந்தர்களை மாநில அரசு நியமிக்க அதிகாரம் வழங்க வகை செய்யும் சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்த தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 13-ந் தேதி நடைபெற்றது.
இந்த விசாரணையின் போது, பல்கலைக் கழக மானிய குழுவான யுஜிசியின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, விசாரணையை ஒத்திவைக்க கேட்டுக் கொண்டார். இதனால் வழக்கு விசாரணை செப்டம்பர் 22-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஆளுநரின் பதில் மனு
இதனிடையே உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு மீது ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,
- துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க வகை செய்யும் சட்டத்தை ஏற்க முடியாது
- மாநில பல்கலைக் கழகங்களின் வேந்தர் ஆளுநர்தான். பல்கலைக் கழக சட்ட விதிகளின் படியே ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.
- ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில், யுஜிசி பிரதிநிதி அல்லாத துணைவேந்தர் நியமனத்துக்கான தேடுதல் குழுக்களை அமைக்க வேண்டும் என்ற வழக்கு நிலுவையில் உள்ளது.
- ஆகையால் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக் கழக மானிய குழுவான யுஜிசி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மாநில அரசே துணை வேந்தர்களை நியமிப்பது யுஜிசி விதிகளுக்கு எதிரானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.