மூத்த பத்திரிகையாளரும் திராவிடர் இயக்க ஆய்வாளரும் தமிழ்நாடு அரசின் சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தின் தலைமை இயக்குநருமான ஏ.எஸ்.பன்னீர்செல்வனுக்கு முரசொலி அறக்கட்டளையின் ‘முரசொலி செல்வம்’ விருது வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக முரசொலி அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கை: சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் கடந்த 21.10.2024 அன்று நடைபெற்ற முரசொலி செல்வம் படத்திறப்பு’ நிகழ்ச்சியில், “முரசொலி செல்வம் அவர்கள் பெயரால் ஆண்டுதோறும் விருது வழங்குவது; அதனை ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் திமுக முப்பெரும் விழா நிகழ்ச்சியில் வழங்கப்படும்” என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

- ஊடகத்துறையில் 50 ஆண்டுகால அனுபவம் பெற்றவரும்
- ‘தி இந்து’, ‘பிசினஸ் இந்தியா’, ‘அவுட் லுக்’ ஆகிய பத்திரிகைகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவரும்
- இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் Reuters Fellow–ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒன்றிய – மாநில அரசு உறவுகள் பற்றி விரிவான ஆய்வை மேற்கொண்டவரும்
- 10 ஆண்டுகள் தெற்காசிய ஊடக வளர்ச்சி நிறுவனமான Panos South Asia–வின் நிருவாக இயக்குநராகச் செயல்பட்டவரும்
- அதே காலத்தில் Global forum for Media Development–இன் துணைத் தலைவராகப் பணியாற்றியவரும்
- தற்போது, தமிழ்நாடு அரசு புதிதாக நிறுவியுள்ள சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தின் தலைமை இயக்குநராக (Director General, Chennai Institute of Journalism)
பணியாற்றி வருபவரும் - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலை உலகப் புகழ்பெற்ற பெங்குயின் நிறுவனத்திற்காக ஆங்கிலத்தில் “Karunanidhi –A Life” என்ற பெயரில் எழுதியவருமான மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் அவர்களுக்கு 2025ஆம் ஆண்டிற்கான ‘முரசொலி செல்வம் விருது’ வழங்கப்படும் என அறிவிப்பதில் முரசொலி அறக்கட்டளை மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.
2025ஆம் ஆண்டிற்கான ‘முரசொலி செல்வம் விருது’ வருகிற 17–09–2025 அன்று மாலை 6.00 மணியளவில் கரூர், கரூர் பை–பாஸ் சாலை, கோடங்கிபட்டியில் நடைபெறும்‘தி.மு.க. முப்பெரும் விழா’வில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் – தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களால் வழங்கப்படவிருக்கிறது. இவ்வாறு முரசொலி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.