மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் இந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு வழக்கில் (Malegaon Bomb Blast Case) இன்று தீர்ப்பு அளிக்கப்படலாம் என்பது எதிர்பார்ப்பு.
2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ந் தேதி மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம் மாலேகான் நகரில் உள்ள மசூதி அருகே சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இந்துத்துவா தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்து பெண் சாதுவான பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோகித், முன்னாள் ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய், அஜய் ரகிர்கர், சுதாகர் திவேதி,சுதாகர் சதுர்வேதி, சமீர் குர்கர்னி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சாது பிரக்யா சிங், பின்னர் பாஜகவின் வேட்பாளராக போட்டியிட்டு எம்பியானார்.
மகாராஷ்டிரா பயங்கரவாதத் தடுப்புப் படை, இந்த வழக்கை முதலில் விசாரித்தது. பின்னர் தேசிய புலனாய்வு முகாமை இவ்வழக்கை விசாரித்தது. இந்த வழக்கின் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்து தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டது.
மாலேகான் குண்டு வெடிப்பு நிகழ்ந்து 17 ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்பது எதிர்பார்ப்பு.