தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது காவல் நிர்வாகப் பிரிவு டிஜிபியாக உள்ள வெங்கடராமன், கூடுதல் பொறுப்பாக டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக காவல்துறை டிஜிபியாக பணியாற்றிய சங்கர் ஜிவால் ஓய்வு பெற்ற நிலையில் பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறை வீட்டு வசதி நிறுவன இயக்குநர் டிஜிபி சைலேஷ்குமார் யாதவ் ஓய்வு பெற்றதால் புதிய இயக்குநராக டிஜிபி வினித் வான்கடே நியமிக்கப்பட்டுள்ளார்.

பொறுப்பு டிஜிபி வெங்கடராமன், 1994-ம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரி. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றியவர்; கலைஞர் மற்றும் ஜெயலலிதா முதல்வர்களாக பதவி வகித்த காலத்தில் பாராட்டுகளைப் பெற்றவர்.
1968-ம் ஆண்டு மே 8-ந் தேதி பிறந்தவர் வெங்கடராமன். மயிலாடுதுறை மணிக்கூண்டு மஹாதன் வீதியைப் பூர்வீகமாக கொண்டவர்.
டிஜிபி வெங்கடராமன் இதுவரை பணியாற்றிய விவரங்கள்
- 22.01.1995- 19.11.1996- ஹைதராபாத்தில் பயிற்சி
- 20.11.1996- 29.06.1997 திருச்செந்தூர் ASP
- 03.07.1997- 03.09.1997 கோவில்பட்டி ASP
- 4.09.1997-25.12.1997- முசோரி (உத்தரகாண்ட் பயிற்சி) ASP
- 26.12.1997- 08.07.1998- ராமநாதபுரம் ASP
- 14.07.1998-24.09.1998- SP- டெல்லி பணி உயர்வு
- 25.09.1998-8.10.1998- சென்னை பட்டாலியன் கமாண்டர்
- 17.12.1998-27.12. 1999- மதுரை SP
- 29.12.1999- 3.10.2000- சென்னை டெபுடி கமிஷனர்
4.10.2000- 10.03.2000- பெரம்பலூர் SP - 11.03.2000- 27.11.2001 சேலம் SP (தேர்தல் ஆணையத்தால் பணியிடம் மாற்றம்)
- 29.11.2001- 23.01.2008 சிபிஐ ACP
- 23.01.2008- 01.06.2008 சென்னை DIG
- 2.07.2009- 16.02.2010 சிபிசிஐடி DIG
- 18.02.2010-17.07.2011- சேலம் DIG
- 20.07.2011- 25.04.2012 விஜிலன்ஸ் DIG
- 25.04.2012- 30.07.2017 விஜிலன்ஸ் IG
- 03.07.2017-15.11.2017- ஃபுட் செல் IG
- 28.06.2019- 25.10.2021 சைபர் கிரைம் ADGP
- 25.10.2021- 05.05.2023- போலீஸ் HQ ADGP
- 05.05.2023- 10.07.2024- சிபிசிஐடி ADGP
- 10.07.2024 – போலீஸ் HQ ADMIN ADGP
- 01.01.2025- DGP பதவி உயர்வு (போலீஸ் HQ ADMIN )
திருச்செந்தூர் முதல் சென்னை வரை…
திருச்செந்தூரில் ASP-யாக பணிபுரிந்த போது கள்ளச்சாராயம் மற்றும் சமூக விரோத செயல்களைத் தடுக்க தனியாக ரோந்து சென்று கட்டுப்படுத்தியவர் என்ற பெயர் பெற்றவர்.
ஆண்டிமடம் கலவரம்
பெரம்பலூர் எஸ்.பி.யாக இருந்த போது, ஆண்டிமடம் கோவில் ஒன்றில் சிபிஎம் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு இயக்க நிர்வாகி திருநாவுக்கரசர் தலைமையில் தலித்துகள் கோவில் நுழைவுப் போராட்டம் நடைபெற இருந்தது. இதற்கு வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு தலைமையில் ஆயிரக்கணக்கானோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பதற்றம் நிலவியது. வட தமிழ்நாட்டில் ஜாதிவன்முறை வெடிக்கும் அபாயகரமான சூழலில் எஸ்பியாக இருந்த வெங்கடராமன், இருதரப்பினரிடமும் இடைவிடாமல் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வை உருவாக்கினார்; தலித்துகளும் கோவிலில் வழிபாடு நடத்தினர். அப்போது முதல்வராக இருந்த கலைஞர், எஸ்பி வெங்கடராமனை வெகுவாகப் பாராட்டினார்.
திமுக அமைச்சர்கள் மீது வழக்குகள்
ஜெயலலிதா முதல்வராக பதவி வகித்த காலத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் 6 ஆண்டுகள் ஐஜியாக பணிபுரிந்தார். இந்த கால கட்டத்தில்தான் திமுகவின் இன்றைய அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பலர் மீதும் இப்போதும் நிலுவையில் இருக்கும் சொத்து குவிப்புகள் ஏராளமாக போடப்பட்டன. இதனால் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் பாராட்டுகள் பெற்றார். கிருஷ்ணகிரியில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரையும் கைது செய்து சிறையில் அடைத்த ‘சம்பவகாரர்’தான் பொறுப்பு டிஜிபி வெங்கடராமன்.
நவீனமயமாக்கல்
போலீஸ் தலைமையக அட்மின் ஏடிஜிபி, டிஜிபியாக பதவி வகித்த காலத்தில் தகவல் தொழில் நுட்பத் துறையை முழு வீச்சில் பயன்படுத்தி நவீனமயமாக்கியவர். காவல்துறை தொடர்பான அனைத்து அரசாணைகளையும் விரல் நுனியில் வைத்திருப்பவர்.