– பாஸ்கர் செல்வராஜ்
நள்ளிரவில் வெனிசுவேலா தலைநகரின் மின்சாரம், இணையம், மின்னணு கருவிகளை எல்லாம் நவீன மின்னணு முடக்க தொழில்நுட்ப தாக்குதலின் (electronic warfare) மூலம் அமெரிக்க இராணுவம் செயலிழக்கச் செய்து அந்நாட்டின் அதிபரை அதிரடி நடவடிக்கையின் மூலம் கடத்திக் (கைதுசெய்து) கொண்டு வந்திருப்பதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.
அதிர்ச்சி கொடுக்கும் அமெரிக்க அதிரடிகள்
அரசியல் அறமற்று சர்வதேசிய விதிகளை மதிக்காமல் அமெரிக்கா எடுத்த அந்த நடவடிக்கையை எண்ணிப் பார்த்திராத உலக நாடுகளின் மக்களும் ஆளும் வர்க்கங்களும் அதிர்ச்சியில் உறைந்து போயின. அதன்பிறகு அந்த நாட்டின் எண்ணைய்யும் அதனை உற்பத்தி செய்யும் கருவிகளையும் தங்களிடம் இருந்து வெனிசுவேலா கைப்பற்றிக் கொண்டதாகவும் அதனைத் தற்போது மீட்பதாகவும் தென்னமரிக்க கண்டம் முழுவதும் அமெரிக்காவுக்குச் சொந்தமெனவும் மற்றவர்கள் (ரசியா, சீனா) நுழைய அனுமதியோம் என்றும் அமெரிக்கா முழங்கியது. தங்களின் விருப்பத்துக்கு மாறாக நடக்கும் கியூபா, கொலம்பியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் தமது போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் இந்தக் கதிதான் உங்களுக்கும் என்று எச்சரித்தது.

ரசியாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா அதனை நிறுத்தாவிட்டால் இன்னும் அதிகமான வரிவிதிப்பை எதிர்கொள்ளும் என்று மிரட்டியது. உடனே மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இணையதள இணைப்புகள் மூலம் ஈரானில் போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டு போராட்டக்காரர்கள் ஆயுதபாணிகளாக மாற்றப்பட்டு அந்த நாடே பற்றி எரிந்தது. இந்தப் போராட்டத்துக்கு உதவியாக எப்பொழுது வேண்டுமானாலும் அமெரிக்கா அந்த நாட்டைத் தாக்கி அங்கே ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம்; அதனால் அந்தப் பகுதியே போர்க்களமாகலாம் என்ற கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டு தற்காலிகமாக அது நிறுத்தி வைக்கப்பட்டு எப்போது வேண்டுமானாலும் மீண்டும் வெடிக்கலாம் என்ற சூழல்.

அது நின்றவுடனே கிரீன்லாந்து அமெரிக்க பாதுகாப்புக்கு அவசியமானது; அதனை அமெரிக்கா பணம் கொடுத்து வாங்கும்; தேவைப்பட்டால் இராணுவ நடவடிக்கை மூலம் எடுத்துக்கொள்ளும் என்றது. அதனை எதிர்த்து ஐரோப்பிய நாடுகள் படைகளை அனுப்பின. அந்த எதிர்ப்புக்குத் தண்டனையாக அவர்களின் மீது பத்து விழுக்காடு வரிவிதித்து அதனை மேலும் அதிகரிப்பேன் என மிரட்டினார் ட்ரம்ப். பதிலுக்கு அவர்கள் அமெரிக்காவுடன் செய்துகொண்ட வரிவிதிப்பு தொடர்பான ஒப்பந்தத்தை திரும்பப் பெறப்போவதாகவும் அமெரிக்கக் கடன்பத்திரங்களில் இருந்து வெளியேறப் போவதாகவும் மிரட்ட அமெரிக்க டாலரும் பங்குச்சந்தை சரியத் தொடங்கியது. வேறுவழியின்றி கிரீன்லாந்தின் கனிமவள உரிமை மற்றும் அமெரிக்கா பாதுகாப்புக் கட்டமைப்பை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பான ஒப்பந்தம் செய்ய ஒப்புக்கொண்டு பின்வாங்கி இருக்கிறது. இது முடிந்ததும் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது.

ஆட்சிக்கு வந்தவுடனே கனடா அமெரிக்காவின் ஐம்பத்தோராவது மாநிலமாக இணையவேண்டும் என்று அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். பின்பு சீனாவையும் உலக நாடுகளையும் வரிவிதித்து பீதியூட்டினார். சீனா தவிர உலக நாடுகள் அவரிடம் பணிந்தன. உறுதியாக நின்று பேச்சுவார்த்தை நடத்திய சீனா சில்லுகள் மீதான தடையை உடைத்து அரிதில் கிடைக்கும் கனிமங்களின் மீதான தடையைத் தளர்த்தி இருக்கிறது. மற்ற நாடுகள் அவர் கேட்டத்தைக் கொடுத்து தன்மீதான வரியைக் குறைத்துக் கொண்டன. இந்தியா பேச்சுவார்த்தையில் இழுத்துக் கொண்டிருக்கிறது. இதனை அடுத்து ரசியாவுடன் பேசி உக்ரைன் போரை முடிவுக்கு வரப்போகிறோம் என்று அறிவித்தார். அது இழுபறியான நிலையில் இப்போது இத்தனை அதிரடி நடவடிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் மூலம் உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறார்.
இந்த எதிர்பாராத அரசியல் பொருளாதார இராணுவ அதிரடிகளை ட்ரம்ப் என்ற தனிமனிதனை முன்னிறுத்தி அரசியல் அடிப்படை தெரியாத, எப்போதும் தன்னை நோக்கி கவனத்தை இழுத்து விளம்பரம் தேடும் சுயமோகி, எளிய நாட்டின் தலைவர்களை மிரட்டி வம்பிழுத்து தனது வணிக நலனை அடையத் துடிக்கும் ஒரு அரசியல் கோமாளியின் அற்பத்தனங்கள் என்று புரிந்து கொள்ளலாம்.
சற்று மேலே சென்று அமெரிக்கா தனது பொருளாதார ஆதிக்கத்தை நிலைநிறுத்த அரசியல் அறமற்று செய்யும் பொருளாதார இராணுவ தாக்குதல்கள் என்றும் பார்க்கலாம். மேம்போக்கான இந்த இரண்டு பார்வைகளுக்குப் பதிலாக மாறும் உற்பத்தி, தனிநபர்வாத தராளமய ஒழுங்கின் (liberal order) உடைப்பு, டாலரின் வீழ்ச்சி, எல்லை மீறும் அமெரிக்கக்கடன், பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க இராணுவ அரசியலைக் கையிலெடுக்கும் அமெரிக்கா என ஆழ்ந்தும் பார்க்கலாம்.
மற்ற இரண்டைத் தவிர்த்த மூன்றாவது வகைப்பட்ட ஆழமான புரிதலே தமிழ்நாடு இந்தக் கொந்தளிப்பான உலக சூழலில் நிதானமாக சிந்தித்து எப்படியான பாதை நமக்கு விடுதலை அளிக்கும் நடைமுறை சாத்தியமான பாதை என்று முடிவெடுத்து பயணிக்க உதவும் என்பதால் நாம் அந்த வகையான பகுப்பாய்வைச் செய்ய முயல்வோம்.
உற்பத்தித் தொழில்நுட்ப மாற்றமும் பார்வையும்
பொதுவாக வர்க்கங்களின் வளர்ச்சியும் அவற்றுக்கு இடையிலான போராட்டங்களும் போர்களும்தான் உலக வரலாறு. ஆகவே உலகின் கொந்தளிப்பான சூழலும் தொடர்ந்து நடக்கும் போராட்டங்களும் போர்களும் நமக்கு புதிதல்ல. காலமாற்றத்தில் வளர்ந்து நிற்கும் போரிடும் வர்க்கங்களும் அவைகளின் போரிடும் முறைகளும்தான் நமக்கு புதிது. எனவே நமக்கு தற்போது ஏற்படும் அதிர்ச்சி அந்தப் புதுமைகளினாலும் நாம் கண்டிராத மாற்றங்களினாலும் ஏற்படும் அதிர்ச்சி.
அந்தப் புதுமை மாற்றங்கள் நமது காலத்தில் ஏற்பட்டு இருக்கும் உற்பத்தி தொழில்நுட்ப மாற்றத்தினால் சாத்தியமானது. எனவே அந்த உற்பத்தி மாற்றத்தின் ஊடாக அமெரிக்கா உலகில் ஏற்படுத்தும் அரசியல் பொருளாதார இராணுவ அதிர்ச்சிகளைப் புரிந்து கொள்வதே முழுமையான புரிதலை ஏற்படுத்தும்.
உற்பத்தி தொழில்நுட்ப மாற்றம் என்றால் பொதுவாக நாமும் நமது வாழ்வும் வீடும் நாடும் உலகமும் தலைகீழான மாற்றங்களைச் சந்தித்து வருவதாக நமது கண்கள் காணும் மாற்றங்கள். இதுவரையிலும் நமது கண்கள் கண்டுவந்த நம்மைச் சுற்றி இருந்த பொருள்களில் மாற்றம் ஏற்படும் போது நமது மூளை நம்மைச்சுற்றி ஒரு மாய்மாலம் நிகழ்வதாக உணர்கிறது.
ஆயிரக்கணக்கான பொருள்களின் மாற்றங்களால் ஏற்படும் அந்த உணர்வை அறிவுப்பூர்வமாக புரிந்துகொள்ள வேண்டுமானால் இப்பொருட்கள் நமது வாழ்வில் என்ன வகையான மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்ற அளவுகோளின் அடிப்படையில் பகுத்தாய வேண்டும். அது இந்த மாற்றத்தின் சாரத்தையும் (essence) உண்மையான பொருளையும் நமக்கு உணர்த்தி சரியான திசையில் நம்மை வழிநடத்தும். அதுவல்லாத பார்வை அந்த மாய்மாலத்தில் நம்மைச் சிக்கவைத்து அதனுள் மூழ்கடிக்கச் செய்துவிடும்.

உற்பத்தி தொழில்நுட்ப மாற்ற உலக வரலாறு
இதனடிப்படையில் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட துருப்பிடிக்காத இரும்பும், சிமெண்ட்டும் நிலக்கரியை எரித்து இயக்கிய நீராவி இயந்திரமும் அடிப்படையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது என்றால் மனிதர்களின் உணவு, உடை, இருப்பிடத்தையும் மேம்படுத்தி உள்நாட்டு இரயில் போக்குவரத்து மற்றும் நாடுகளுக்கு இடையிலான கப்பல் போக்குவரத்தையும் மாற்றியமைத்தது எனலாம். இங்கிலாந்தின் உலகப் பரவலும் ஆதிக்கமும் இந்த உற்பத்திக்கான மூலப்பொருள், சந்தைகளைக் கைப்பற்றி அதனை விரிவாக்கும் தேவைக்கானது.
அதன் வளர்ச்சியின் போக்கில் நீராவியில் இயங்கிய இயந்திரம் மின்சாரத்திலும் எண்ணெய்யிலும் இயங்கும் இயந்திரமாக மாற்றம் கண்டு வாழ்வதற்கு தேவையான பொருள் உற்பத்தியையும் இரயில் சார்ந்த உள்நாட்டு போக்குவரத்தை மகிழுந்து, பேருந்துகள் சார்ந்ததாகவும் மாற்றியமைத்தது. நாடுகளுக்கு இடையிலான கப்பல் போக்குவரத்ததுடன் விமான போக்குவரத்தையும் கொண்டு வந்தது.
இந்தப் புதிய உற்பத்தி தொழில்நுட்பத்தை அடைந்த நாடுகளுடன் உலகச் சந்தையைப் பகிர்ந்து கொள்ள மறுத்து தங்க நாணயத்தின் அடிப்படையில் இயங்கிய இங்கிலாந்து வெள்ளி நாணயத்தின் அடிப்படையில் இயங்கிய நாடுகளுடன் வர்த்தகப்போர் மற்றும் நாணயப்போரில் ஈடுபட்டு பின்னர் உலகப்போரில் தோற்று தனது ஆதிக்கத்தை அமெரிக்க, ரசிய நாடுகளுடன் பகிர்ந்து கொண்டு பின்தங்கியது.
தங்க நாணயத்தின் அடிப்படையிலான டாலரில் இயங்கும் அமெரிக்க தரப்பு இவர்களுக்கு இணையாக மின்சார, எண்ணெய் உற்பத்தி மற்றும் அதில் இயங்கும் பொருள்களின் தொழில்நுட்ப வளர்ச்சியை எட்டி டாலர் அல்லாத நாணயத்தில் இயங்கும் சோவியத் ரசிய தரப்பு என உலகம் இருதுருவங்களாகப் பிரிந்தது. எண்ணெய் சார்ந்த உற்பத்தி அதில் இயங்கும் பொருள்களுக்கான சந்தைகளை அமெரிக்கா கைப்பற்றி விரிவடைய சோவியத்தின் மாற்று மூலதனக் கட்டமைப்பு தடையானது. அதனை உடைக்க நடந்த திரைமறைவுப் போர் அமெரிக்க-சோவியத் பனிப்போராக அறியப்படுகிறது.

எழுபதுகளுக்குப் பிறகு சோவியத் ஒன்றிய நாடுகள் தவிர்த்த பகுதிகளில் பாய்ந்த பெட்ரோடாலர் நிதிமூலதனத்தை உருவாக்கி கண்காணித்து நிர்வகிக்க தகவல்தொடர்புத் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்த அமெரிக்கா இந்த மூலதன நிர்வாக தொழில்நுட்ப உருவாக்கத்தில் பின்தங்கிய சோவியத்தை வீழ்த்தியது. அதன் அடிப்படையில் இயங்கிய சமூகமயமாக்கப்பட்ட மூலதனமும் அந்த உற்பத்திக்கான சோசலிச சமூகக் கூட்டுத்துவ ஒழுங்கும் உடைந்து நொறுங்கியது.
உலகத்தில் எண்ணெய் மதிப்பைத் தெரிவிக்கும் ஒற்றை நாணயமாக டாலர் மாற்றம் கண்டு அந்தத் தனியார் நிதிமூலத்தனத்தின் அடிப்படையிலான உற்பத்தி ஒழுங்காக தனிநபர்வாத தராளமயம் மாறியது. இந்த எண்ணெய் அடிப்படையிலான உற்பத்திக் கட்டமைப்புக்குள் எண்ணெய் அல்லாத முறைசாரா மின்சாரம் உள்ளிட்ட மாற்று எரிபொருள்கள் அவற்றின் மூலம் இயங்கும் இயந்திரங்கள் என்பதாக உற்பத்தித் தொழில்நுட்பம் மாற்றம் கண்டு வருகிறது.
அது வாழ்க்கைக்கான பொருள் உற்பத்தியை மட்டுமல்ல இரயில், மகிழுந்து, கப்பல், விமானம் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்தையும் மாற்றியமைத்து வருகிறது. உச்சமாக பரிவர்த்தனைக்கான பணத்தின் உருவாக்கம், மதிப்பு, பரிமாற்றம் உள்ளிட்டவற்றுக்கு இதுவரையிலும் பயன்படுத்தி வந்த கட்டமைப்புகளை மாற்றியமைக்கும் புதிய தொழில்நுட்பம் (blockchain technology) கண்டறியப்பட்டுள்ளது. இது பரிவர்த்தனைக்கான நேரத்தைக் குறைத்து குவிந்து கிடக்கும் பணப்பொதியின் (hoard) நிலைத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கி மூலதன உருவாக்க பரிவர்த்தனை நிர்வாகத்தில் ஒரு புரட்சியை உருவாக்கக் காத்திருக்கிறது.
இதனோடு அணுவாற்றலில் இயங்கும் கப்பல்கள் இதுவரையிலுமான கடல்வழி சரக்குப் போக்குவரத்தை மாற்றி புதிய பனிப்பாறைகள் மிகுந்த ஆர்க்டிக் பகுதியின் வழியாக ஐரோப்பிய, ஆசிய நாடுகளுக்கு இடையிலான சரக்குப் போக்குவரத்தைச் சாத்தியமாக்கி வருகிறது. சோவியத் உடைப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட டாலர்மைய உற்பத்திக் கட்டமைப்பு சூழலுக்கு ஏற்ப தமது சமூகமயமாக்கப்பட்ட மூலதனத்தைப் பகுதியளவு மட்டும் தனியார்மயமாக்கிய சீனா (ரசியாவும்) மூலதனத்தை உருவாக்கி நிர்வகிக்க அடிப்படையான இணைய தொழில்நுட்பத்தை அடைந்ததோடு தற்போதைய புதிய உற்பத்திக்கான தொழில்நுட்பங்களையும் அடைந்திருக்கிறது.

புதிய உற்பத்தி நுட்பங்கள், பணமதிப்பு, உலக ஒழுங்கு
இங்கிலாந்தைப் போலவே உற்பத்தி நுட்பங்களின் பின்தங்கி பழைய எண்ணெய்யை அடிப்படையாகக் கொண்ட பெட்ரோடாலர் நிதிமூலத்தனதில் இயங்கும் அமெரிக்கா புதிய உற்பத்திப் பொருள்களுக்கான உலக சந்தையைச் சீனாவுடன் பகிர்ந்துகொள்ள மறுத்து டாலர் மதிப்பைத் திரித்து மற்ற நாணயங்களைத் தாக்கி சரித்து மாற்று நாணயங்களின் வழியான நாணய பரிவர்த்தனையை தடுத்துக் கொண்டு உலக நாடுகளுடன் நாணயப்போர், வர்த்தகப்போர், வரிவிதிப்புப்போர், நிதியப்போர், திரிபுத்தகவல்போர், பதிலிப்போர்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
தற்போதைய ட்ரம்ப் ஆட்சிக்கு முன்புவரை தனது உலக விதிகளின் அடிப்படையிலான விதிகளை (rules based order) வலியுறுத்தி அதனை உடைக்கும் சீன, ரசிய நாடுகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் உடைக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டது. அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில் தனது ஆதிக்கத்தை மையப்படுத்திய ஒருதுருவ ஒழுங்கைக் கைவிட்டு மற்ற நாடுகளின் பங்கையும் ஒப்புக்கொள்ளும் பல்துருவ உலக ஒழுங்கை ஏற்ற இந்த நிர்வாகம் ஆட்சிக்கு வந்தது.
உலகச் சந்தையைப் பகிர்ந்து கொள்வது என்ற அடிப்படையான நிலைப்பாட்டை எடுத்துவிட்டாலும் எப்படிப் பகிர்ந்து கொண்டு அதில் தனது பங்கை எப்படி உறுதிசெய்வது? என்பதில் சிக்கல். ஏனெனில் அன்றைய உலகப் போருக்குப் பிறகான உற்பத்தி இரும்பினால் உருவாக்கப்பட்டு எண்ணெய்யின் இயங்கும் ஒரே மாதிரியான பொருளாதார உற்பத்தி.
அது சமமாக பலரிடமும் இருந்ததால் அன்றைய உலக அரசியல் அதற்கான சந்தையைப் பகிர்ந்து கொள்வதற்கானதாக மாறி தங்கத்தை வைத்திருந்த அமெரிக்க அணி அது தவிர்த்த மற்றவற்றை வைத்திருந்த எதிரணி என்பதாக இருதுருவ உலகம் உருவானது. அதன்பிறகான நிதிமூலதன நிர்வாக தகவல் தொழில்நுட்பம் அமெரிக்கர்களிடம் மட்டும் இருந்ததால் உலகமே அவர்களுக்கு மட்டுமானது.
ஆனால் இன்றைய உற்பத்தியில் இரும்பினாலும் சிலிக்கானாலும் பொருள்கள் உருவாக்கப்பட்டு எண்ணெய் மற்றும் அதுவல்லாத மாற்று எரிபொருள், மின்கலங்களால் இயங்கும் உற்பத்தி என பழைய புதிய உற்பத்திகள் இரண்டும் கலந்த உற்பத்தியாக இருக்கிறது. அமெரிக்கர்களிடம் இருக்கும் எண்ணெய், சிலிக்கன், தகவல்தொழில்நுட்பங்கள் எதிரணியிடமும் இருக்கிறது. ஆனால் அவர்களிடம் இருக்கும் மாற்று உற்பத்தி தொழில்நுட்பங்கள் (மரபுசாரா மின்னாற்றல், அணுவாற்றல், மின்கலம், போக்குவரத்து, அதிவிரைவு இணையம்) அமெரிக்கர்களிடம் இல்லை.
இந்தப் பலகீனத்தைச் சரிசெய்ய அமெரிக்கா பழைய எண்ணெய் அடிப்படையிலான உற்பத்தியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு அந்த உற்பத்தி சார்ந்த எண்ணெய் வளநாடுகள், சந்தைகளைத் தன்பக்கம் கொண்டுவந்து சீனாவைத் தனிமைப்படுத்த செய்த முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து இப்போது உலகக் கட்டுப்பாட்டை விடுத்து அமெரிக்கக் கண்டத்தை மட்டுமேனும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயல்கிறது. தான் இழந்து கொண்டிருக்கும் எண்ணெய் விலையைத் தீர்மானிக்கும் ஆற்றலை முடிந்த அளவு கட்டுப்படுத்தி மாற்று உற்பத்திக்கான கனிமவள (லித்தியம், அரிதிற் கிடைக்கும் தனிமங்கள், நிக்கல், கோபால்ட்) உற்பத்தியில் ஈடுபட்டு புதிய உலகப் பங்கீட்டில் தனது பங்கை அதிகரிக்க நினைக்கிறது. இதன்மூலம் உலகில் உற்பத்தியாகும் பொருள்களின் மதிப்பைத் தீர்மானிக்கும் தனது இடத்தை உறுதி செய்யத் துடிக்கிறது.

தமிழ்நாட்டுக்கான எச்சரிக்கை என்ன?
அந்தத் தேவையின் பொருட்டு தான் உருவாக்கி கட்டமைத்த உலக ஒழுங்கைத் தானே உடைக்கிறது. அதன் வெளிப்பாடே மாடுரோ கடத்தலும் உலக அரசியல் கொந்தளிப்பும். இது உருவாகப் போகும் புதிய உலக ஒழுங்கில் அமெரிக்காவின் பங்கையும் இடத்தையும் உறுதி செய்யுமா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் அது உருவாக்கி ஊதிப்பெருக்கி வைத்திருக்கும் நிதிமூலதன பங்குச்சந்தையை கண்ணாடி மாளிகையை நிச்சயம் உடைத்து உருக்குலைக்கும். அந்த மாளிகையின் ஒரு அறையாக மாற்றப்பட்டு இருக்கும் இந்திய மூலதன நிதியக் கட்டமைப்பு அதனுடன் சேர்ந்து உடைந்து கடும் நெருக்கடியைச் சந்திக்கும். உலகமும் இந்தியாவும் எதிர்கொள்ளப் போகும் இந்த இடரையும் அது வழங்கப் போகும் வாய்ப்பையும் இப்போதே (proactive) தமிழ்நாடு உணர்ந்து தனது நோக்கம், பாதை, செயல்பாடுகளை வகுத்துக் கொள்வது நல்லது.
கட்டுரையாளர் குறிப்பு

பாஸ்கர் செல்வராஜ் – தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.
