விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகள் அந்த அளவுக்கு வொர்த் இல்லை என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் இன்று (மார்ச் 8) திருவண்ணாமலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், தவெக பாஜகவுடன் பேசுவதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு, “விஜய் எந்த மதவாதத்திற்கு எதிராக நான் கட்சி தொடங்கியிருக்கிறேன் என்று சொன்னாரோ, அதே கட்சியோடு அவர் கூட்டணி வைத்தால் தமிழ்நாடு மக்கள் அவரை நிராகரிப்பார்கள்” என்றார்.
விஜய்யின் தேர்தல் வாக்குறுதி குறித்த கேள்விக்கு, “விஜய் பாணியில் சொல்ல வேண்டும் என்றால், அந்த அளவுக்கு அதெல்லாம் வொர்த் இல்லை. எல்லாமே ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள், கட்சியினுடைய தலைவர்கள் கொடுத்த தேர்தல் அறிக்கைகளை அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணி அவர் வெளியிட்டிருக்கிறார். அவர் சொல்வதெல்லாம் பல திட்டங்கள். இந்த மண்ணில் ஆண்டாண்டு காலமாக, பன்னெடுங்காலமாக நடந்தேறி வருகின்ற திட்டங்கள். அந்தத் திட்டங்கள் இந்தத் தமிழ்நாட்டில் இருக்கிறதா இல்லையா, அது நடந்து வருகிறதா இல்லையா என்கிற ஒரு அடிப்படைப் புரிதல் கூட அவருக்கு இல்லாதது தான் இதைக் காட்டுகிறது” என்றார்.
திமுக ஆட்சி அமைக்குமா என்ற கேள்விக்கு, “மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் எல்லாம் ஒன்றுகூடி திமுக தலைமையில் நான்கு தேர்தல்களில் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறோம். இந்தத் தேர்தலிலும் திமுக தலைமையிலான இந்த அணி மகத்தான வெற்றி பெறும்” என நம்பிக்கை தெரிவித்தார்.
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பதவி விலகி எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்படுவது குறித்த கேள்விக்கு, “இதுதான் பாரதிய ஜனதாவினுடைய மாடல். பல மாநிலங்களைத் தனதாக்கிக் கொள்வது, முதலமைச்சர்களைத் தனதாக்கிக் கொள்வது, சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறையைப் பயன்படுத்தி மிரட்டுவது, அடிபணியாதவர்களைச் சிறையில் அடைப்பது பாஜகவின் வேலை. கெஜ்ரிவால் போன்றவர்களைப் பொய் வழக்கில் சிறையில் அடைத்தனர். டெல்லி உயர்நீதிமன்றமே உச்சநீதிமன்றத்தில் அவர் நிரபராதி என்று விடுதலை செய்திருக்கிறது. ஆக, பாரதிய ஜனதா என்பது மதத்தின் பெயரால் மக்களை அணிதிரட்டுகின்ற ஒரு முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த முயற்சி இந்தியாவில் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் வெற்றி பெறும். தமிழ்நாட்டில் ஒருபோதும் வெற்றி பெறாது” என்றார்.
ஏற்கனவே தமிழகத்தில் பத்து லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கும் நிலையில் தேர்தல் அறிக்கைகளை மக்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்ற கேள்விக்கு, “திமுகவைப் பொறுத்தவரை பத்து லட்சம் கோடி கடன் இருந்தாலும், வருகின்ற வரி வருவாயை வைத்து மிகச் சிறப்பாக மாணவர்கள், பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு என்ன தேவை என்பதை எல்லாம் பார்த்துத் திட்டமிட்டு அளவறிந்து அந்த நிதி ஒதுக்கீடு நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.
