தமிழகத்தில் நடைபெற உள்ள 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து தனது கட்சி விலகுவதாகத் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று (மார்ச் 22) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், “விவசாயிகள், மாணவர்கள், மீனவர்கள், தாய்மார்கள் உள்ளிட்ட பல தரப்பினரின் கண்ணீரைத் துடைக்கும் வகையில் 10 அம்சக் கோரிக்கைகளை திமுக பேச்சுவார்த்தைக் குழுவிடம் முன்வைத்தேன். இடங்களின் எண்ணிக்கை கூடப் பிரச்சினை இல்லை. இந்தக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முதலமைச்சர் ஆவண செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
இதே கோரிக்கைகளைப் பல ஆண்டுகளாகத் தமிழக சட்டமன்றத்தில் வலியுறுத்திப் பேசியுள்ளேன். கவன ஈர்ப்புத் தீர்மானங்கள், ஒத்திவைப்புத் தீர்மானங்கள் மற்றும் நேரமில்லா நேரத்தில் அரசின் கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கைகள் மூலம் இக்கோரிக்கைகளுக்காக அழுத்தம் கொடுத்து வந்தேன். சட்டமன்றத்திற்கு வெளியே வந்து ஊடகங்கள் வாயிலாகவும் தமிழக அரசுக்கும், அமைச்சர்களுக்கும் இந்தக் கோரிக்கைகளை முன்வைத்தேன்.
ஆனால், திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு இந்தக் கோரிக்கைகளைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை. அவர்களைப் பொறுத்தவரை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் எங்களுடன் எந்தக் கோரிக்கையும் வைக்காமல் தொகுதி உடன்பாட்டோடு கூட்டணி அமைக்கும் போது, நீங்கள் ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு இப்படிக் கோரிக்கைகள் வைப்பது சரியல்ல என்ற தொனியில் அணுகினர்.
என்னைப் பொறுத்தவரை, தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் தமக்கு வாக்களித்து வெற்றி பெற வைக்கும் மக்களுக்கு நன்மை தரும் செயல்திட்டங்களைக் கூட்டணித் தலைமையாக ஏற்றுக்கொண்டிருக்கும் கட்சிகளிடம் வலியுறுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு உண்மையான பயன் கிடைக்கும்.
நெய்வேலி பகுதியில் வீடுகள், நிலங்கள், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் இடிக்கப்பட்டு மக்களைச் சிதறடித்து, நிலங்களைக் கையகப்படுத்தி ஒன்றிய அரசின் நிலக்கரி எடுப்பதற்கு மாநில அரசு துணை நிற்பது; பரந்தூர் விமான நிலைய விரிவாக்கத்திற்காக நீர்நிலைகளை அழிப்பது; அம்பானி – அதானி துறைமுகத்திற்குக் கடல் பகுதியை நீண்ட காலக் குத்தகைக்கு விடுவது; ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஓஎன்ஜிசி போன்றவற்றுக்கு அனுமதி வழங்குவது; தொழிலாளர் விரோதச் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட பல செயல்பாடுகளுக்கு எதிராக ஒற்றை ஆளாகச் சட்டமன்றத்தில் போராடியுள்ளேன்.
என் தமிழ்ச் சமூகத்திற்குக் குரல் கொடுப்பது அதிகாரிகளுக்கு ஏற்புடையதாக இல்லை. அவர்கள் தொடர்ந்து “வேல்முருகன் இந்த அரசுக்குக் குடைச்சலாக இருக்கிறார்” என்று முதலமைச்சரிடமும் அமைச்சர்களிடமும் தெரிவித்து வந்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, முதலமைச்சர் மற்றும் அமைச்சரவைதான் இந்த நாட்டை ஆள வேண்டும். அப்போதுதான் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துத் திட்டங்களையும் சட்டங்களையும் இயற்ற முடியும். ஆனால், திமுக அரசைப் பொறுத்தவரை இந்த நிமிடம் வரை குறிப்பிட்ட சில அதிகாரிகளின் ஆட்சியாகவே நடைபெற்று வருகிறது எனப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருக்கிறேன்.
தமிழகத்தில் சட்டமன்ற ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்று நான் குற்றம் சாட்டியுள்ளேன். சில அதிகாரிகள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி பேசியுள்ளேன். இவற்றை மனதில் வைத்துக் கொண்ட அதிகாரிகள், வேல்முருகன் இந்தக் கூட்டணியில் தொடர்ந்து கூடுதல் இடங்களுடன் மீண்டும் சட்டமன்றத்திற்கு வந்தால், அவர்கள் செய்த லஞ்ச லாவண்யம், ஊழல், தமிழர் விரோத நடவடிக்கைகள், பாசிச சங் பரிவார் கும்பல்களுக்கு ஆதரவாக திமுக தலைமையிலான அரசிலேயே இருந்து கொண்டு செயல்படுவது ஆகியவை வெட்ட வெளிச்சமாக தோலுரிக்கப்படும் என்ற அச்சத்தின் காரணமாகவும், தமிழர் அல்லாத, தமிழர் விரோத, தமிழின உரிமைக்கு எதிரான, தமிழீழ விடுதலைக்கு எதிரான, சமூக நீதி லட்சியத்திற்கு எதிரான அதிகாரிகளின் பேச்சையும் அறிவுரைகளையும் கேட்டுக் கொண்டு திமுக தலைமை தமிழக வாழ்வுரிமை கட்சியை புறக்கணித்துள்ளது.
சமூக நீதி இயக்கமான திமுக ஏன் தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த மறுக்கிறது? வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை தரவுகளின் அடிப்படையில் பரிசீலனை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது. இதை நான் பலமுறை தமிழக சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டி பேசியபோது, முதல்வர் அதற்கான ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை கொண்டு ஆணையம் அமைத்து விபரங்களை சேகரித்து நடைமுறைப்படுத்த ஆலோசனை செய்வேன் என்று கூறினார். ஆனால் அதைத் தடுத்த சக்தி எது?
சமூக நீதிக்கு எதிரான சக்திகளை உடன் வைத்துக் கொண்டு எப்படி திமுக சமூக நீதி அரசாக தமிழ்நாட்டில் நடைபோட முடியும்?
திமுக தலைமையிலான இந்தக் கூட்டணியில் ஐந்தாண்டு காலம் இருந்தேன். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கான குரலாக என் குரல் ஒலித்துள்ளது. அதற்கான வாய்ப்பை வழங்கிய தமிழக முதல்வர், தோழமையுடன் கூட்டணியில் நட்பு சக்தியாக என்னோடு கைகோர்த்த திருமாவளவன், வீரபாண்டியன், கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம், வைகோ, ஜவாஹிருல்லா, ஈஸ்வரன் உள்ளிட்ட அனைத்து தலைவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் செயற்குழு, பொதுக்குழு, அரசியல் தலைமை குழு, தொகுதி தலைவர், செயலாளர், மாவட்ட தலைவர், மாநில நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவிற்கு இணங்க, இன்று முதல் தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
