தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்ட மோந்தா புயல் காரணமாக வடமாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீரானது கழிவு நீருடன் சேர்ந்து குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட கன்சால்பேட்டை, இந்திராநகர், காந்தி நகர் வீர ஆஞ்சநேயர் தெரு உள்ளிட்ட 7 இடங்களில் 5 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் வடியாத சூழலில் அங்குள்ள மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி மற்றும் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் ஆகியோர் முழங்கால் அளவுள்ள வெள்ள நீரில் நடந்து சென்று நேரில் நேற்று ஆய்வு செய்தனர். தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் வீடுகளில் இருந்து வெளியேறாமல் உள்ள மக்களை நிவாரண முகாம்களுக்கு சென்று தங்குமாறு அறிவுறுத்தினர்.
அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மேயரை சரமாரியாக விமர்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அவர், ”எங்கள் ஏரியாவில் எட்டு வருடமாக குடிக்கிற தண்ணியே கிடையாது. நாங்கள் எல்லோரும் கூலி வேலை தான் செய்கிறோம். தேர்தல் நேரத்தில் ஓட்டுக் கேட்டு வரும்போது, உங்களுக்கு காவா கட்டித் தர்றோம், ரோடு போட்டுத் தர்றோம், தண்ணீர் குழாய் வசதி பண்ணித் தர்றோம்னு சொன்னாங்க. இவங்க ஆட்சிக்கு வந்து, நாலு வருஷம் ஆகுது. இதுவரை ஒரு வசதியும் செய்து தரல” என சரமாரியாக குற்றஞ்சாட்டினார்.

அப்போது ’உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்று ஆட்சியர் கேட்க, ’அஞ்சு நாளாச்சு… குடிக்க தண்ணீயே இல்லை. ஒருவேளை சாப்பாடு வந்து யாரும் தரல. நேத்து நீங்க வந்து போன அப்புறம் காலைல பொங்கல் எடுத்து வந்து கொடுத்தாங்க. நாங்க சாப்பாடு எதிர்பார்க்கல. அடிப்படை வசதிகள் செஞ்சி கொடுங்கனு தான் கேட்கிறோம்’ என பெண்மணி பதிலளித்தார்.
அப்போது குறுக்கிட்ட மேயர் சுஜாதா, ‘யம்மா நேத்து வந்து நான் பெட்சீட், பால், தண்ணி கொடுத்தேன்ல, ஏன் நீங்க வாங்கல’ என கோபமாக கேள்வி எழுப்பினார். அதற்கு அப்பெண்மணி , ‘நீங்க கொடுக்குற பாய் போர்வையை வச்சு நாங்க என்ன பன்றது? எங்களுக்கு அதெல்லாம் வேண்டாம், அடிப்படை வசதிகளை செஞ்சித் தாங்க அது போதும்” பதிலுக்கு சூடாக பதில் கொடுத்தார்.
இதனையடுத்து அங்கிருந்து புறப்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் மேயர் குழு, அடுத்த வீட்டை நோக்கி நகர்ந்து சென்று நிவாரண முகாம்களில் வந்து தங்குமாறு அழைப்பு விடுத்தபடி சென்றனர்.
