வேலூர் மாவட்டத்தில் மூன்றரை வயது குழந்தை, தந்தையின் கண் முன்னே கடத்தப்பட்ட சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே காமாட்சியம்மன் பேட்டை, பவளத்தெருவில் வேணு – ஜனனி தம்பதியினர் வசித்து வருகின்றனர். வேணு பெங்களூருவில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கொரோனா பரவல் சமயத்திலிருந்து கடந்த 5 ஆண்டுகளாக வீட்டிலிருந்து வேலை செய்து வருகிறார்.
இந்த தம்பதியினருக்கு மூன்றரை வயதில் யோகேஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது. நெல்லூர்பேட்டை பகுதியில் இருக்கும் ஒரு கான்வெண்ட் பள்ளியில் யோகேஷ் ப்ரீகேஜி படித்து வருகிறான். இன்று (செப்டம்பர் 24) காலை வழக்கம் போல் குழந்தையை பள்ளியில் விட்டு வந்த வேணு, மதியம் 12.30 மணியளவில் வீட்டுக்கு அழைத்து வந்தார்.
குழந்தை கடத்தல்…
தனது ஸ்கூட்டியில் குழந்தையை முன்னால் அமரவைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்த வேணு, குழந்தையை வண்டியில் அமரவைத்துவிட்டு, இறங்கி சென்று கேட்டை திறந்து, மீண்டும் வந்து வண்டியை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றார்.
அப்போது அதே தெருவில் வேணுவின் பக்கத்து வீட்டுக்கு முன் வெள்ளை நிற மாருதி சுசுகி சியாஸ் காரில் நின்றிருந்த மர்ம நபர்கள் இதையெல்லாம் பார்த்துக்கொண்டே இருந்தனர்.
வேணு குழந்தையை அழைத்துக்குகொண்டு உள்ளே சென்றதும், காரில் இருந்து ஒருவர் தலையில் ஹெல்மெட், கையில் கையுறை அணிந்துகொண்டு இறங்குகிறார். இறங்கியதும் அந்த கார் வேணுவின் வீட்டருகே சென்று தயாராக நிற்கிறது.
இந்தநிலையில் காரில் இருந்து இறங்கிய நபர், வேணுவின் வீட்டுக்குள் சென்று தனது கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை அவரது முகத்தில் தூவிவிட்டு ஒருசில நொடிக்குள் குழந்தையை தூக்கிகொண்டு சென்று காரில் ஏறிவிட்டார்.
வேணு பின்னாலேயே கத்திக்கொண்டு சென்று குழந்தையை மீட்க முயன்றும் முடியவில்லை. அந்த கும்பல் வேணுவை தள்ளிவிட்டுட்டு அதிவேகமாக தப்பித்துவிட்டது.
இதுதொடர்பாக வேணு கூறுகையில், ‘குழந்தையை கையில் வைத்திருந்த போதே கண்ணில் மிளகாய் பொடி தூவிவிட்டு பிடுங்கிக் கொண்டு போய்ட்டான்… பின்னாடியே ஓடிபோய் காரிலிருந்து குழந்தையை இழுத்தபோது என்னை தள்ளிவிட்டுட்டான்’ என்று தெரிவித்தார்.
இந்தசம்பவம் எல்லாம் வேணு வீட்டுக்கு அருகிலிருந்த விட்டில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது.
இந்தநிலையில் வேணு குடியாத்தம் டவுன் ஸ்டேஷனுக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவித்ததுடன், உடனடியாக காவல்நிலையத்துக்கு விரைந்து, தனது குழந்தையை மீட்டுத்தருமாறு புகார் கொடுத்தார்.
வேலூர் மாவட்டம் ஆந்திரா பார்டரில் இருப்பதால், கொள்ளையர்கள் தப்பித்துவிடக் கூடாது என மாவட்டம் முழுவதும் அனைத்து சோதனை சாவடிகளையும் எஸ்.பி.மயில்வானன் அலர்ட் செய்தார். கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய உத்தரவிட்டார்.
போலீசார் அலர்ட்
குழந்தை கடத்தப்பட்ட சமயத்தில் வேலூர் சரகத்தில் உள்ள 4 மாவட்டங்களின் உட்கோட்டங்களில் எஸ்.ஐ, இன்ஸ்பெக்டர், டிஎஸ்பி உள்ளிட்டோர் கலந்துகொண்ட, வழக்கு விசாரணை சம்பந்தமான ‘E-shaksha’ என்ற செயலியை அறிமுகம் செய்து, புலனாய்வு சம்பந்தமாக அந்ததந்த டிஎஸ்பிக்கள் பயிற்சியை அளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது குழந்தை கடத்தப்பட்ட தகவல் அறிந்த வேலூர் சரக டிஐஜி தர்மராஜ் மைக்கில் (வாக்கி டாக்கி) அலர்ட் செய்தார். இதையடுத்து வேலூர் சரகத்துக்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை என நான்கு மாவட்ட போலீசார் தங்கள் பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் குழந்தை யோகேஷை கடத்திச் சென்றவர்கள், திருப்பத்தூர் மாவட்டம் மாதானூர் அருகில் உல்லி ஜங்ஷன் பகுதியில் உள்ள தேவிகாபுரம் கோயில் முன்பு குழந்தையை இறக்கிவிட்டு தப்பித்துவிட்டனர். அப்போது அந்த குழந்தை அழுதுகொண்டே இருந்ததால், இதுதொடர்பாக போலீசாருக்கு அந்த பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
அதன்படி, திருப்பத்தூர் மாவட்ட போலீசார், பொதுமக்கள் சொன்ன இடத்துக்கு சென்று குழந்தையை மீட்டு, குடியாத்தம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று பெற்றோரிடம் ஒப்படைத்தனர்
மற்றொருபக்கம், குழந்தையை கடத்திச் சென்றவர்கள் யார்? அந்த கார் எங்குள்ளது? என விசாரணையை தீவிரப்படுத்தினர் போலீஸார்.
அப்போது போலூர் ஜஞ்ஷன் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக ஒரு கார் கடந்து செல்வதாக திருவண்ணாமலை மாவட்ட காவல்துறைக்கு தகவல் சென்றது. இதையடுத்து, திருவண்ணாமலை போலீசார் சம்பந்தப்பட்ட காரை துரத்திச் சென்று தடுத்து நிறுத்தி விசாரணை செய்ததில் அந்த கார் குழந்தையை கடத்திய கார் இல்லை என தெரியவந்தது.
குழந்தையை கடத்தியது மாருதி சுசுகி சியாஸ் கார் (பதிவெண், KA03 MA0143). ஆனால் போலீசார் துரத்திச் சென்று நிறுத்தியது மாருதி ஷிப்ட் கார். எனவே இந்த காரிலிருந்தவர்களிடம் விசாரித்துவிட்டு, அனுப்பிவைத்துவிட்டனர்.
KA 03 MA0143 பதிவெண்… கர்நாடகா மாநிலம் யலகன்கா ஆர்டிஓ ஆபிஸில் 1997ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஃபியட் யுனோ காருடையது என கண்டறியப்பட்டது. எனவே குழந்தையை கடத்தியவர்கள் திட்டமிட்டு நம்பர் ப்ளேட்டை மாற்றி குழந்தையை கடத்தியிருப்பதையும் போலீசார் உறுதி செய்தனர். இதனால் இந்த 4 மாவட்டங்களில் மாருதி சியாஸ் ரக கார்களை கண்காணித்து சோதனையிட்டு அலசி ஆராய்ந்து வருகின்றனர்.
தொடர்ந்து குழந்தையின் அப்பாவான வேணுவிடமும், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான் சந்தேகிப்பதாக சில பேரை கூறியிருக்கிறார்.
இந்நிலையில் காமாட்சியம்மன்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி உட்பட சிலரிடம் எஸ்.பி மயில்வானன் விசாரித்து வருகிறார். எஸ்.பி தனிப்படை போலீசாரும் விசாரணையில் ஈடுபட்டு வருவதாக கூறுகிறார்கள் காவல்துறை அதிகாரிகள்.
வேலூரில் நடந்த இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.