விஜய் ஒரு பி-டீம்; திரிசூல மிரட்டல்களுக்கு அஞ்சுகிறார்! – கி.வீரமணி விளாசல்

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

நடிகர் விஜய் கொள்கைப் பிடிப்பு இல்லாதவர். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகிய திரிசூல மிரட்டல்களுக்கு அஞ்சி அவர் பாஜகவின் ‘பி-டீம்’ (B-Team) போலச் செயல்படுகிறார்” என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கடுமையாகச் சாடியுள்ளார்.

கோயம்புத்தூர் வ.உ.சி மைதானத்தில் ₹50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள உலகப்புகழ் பெற்ற அறிவியல் அறிஞர் ஜி.டி. நாயுடுவின் உருவச்சிலையை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச் 10) காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி நேரில் சென்று சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ADVERTISEMENT
விஜய் அச்சம்

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கி. வீரமணி, நடிகர் விஜய் பாஜக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், “கொள்கைப் பிடிப்பு இல்லாதவர்களிடம் எதையுமே எதிர்பார்க்க முடியாது. தனது சொந்தத் திரைப்படத்திற்குப் பிரச்சனை வரும்போது கூட மௌனம் காக்கும் விஜய், தொடர்ந்து திமுகவை மட்டுமே தாக்கிப் பேசி வருகிறார். ஆனால், பாஜகவைப் பற்றி எவ்வித விமர்சனமும் செய்வதில்லை. மோடி அரசின் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகிய திரிசூல மிரட்டல்களுக்கு அஞ்சி, விஜய் அந்த அரசின் பி-டீமாகச் செயல்படுகிறார்” என்று குற்றம் சாட்டினார்.

மத்திய அரசு மீது தாக்குதல்

தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்த அவர், “மகளிர் தினப் பரிசாக சிலிண்டர் விலையை உயர்த்திப் பெண்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது ஒன்றிய அரசு. வெளியுறவுத் துறைக் கொள்கை தோல்வியடைந்ததால் பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு நாடு எதை வாங்க வேண்டும் என்பதை அமெரிக்கா போன்ற நாடுகள் தீர்மானிப்பது நமது நாட்டின் சுதந்திரத்திற்கே ஆபத்தானது” என்றார்.

ADVERTISEMENT
ஜிடி நாயுடு பெயர் சர்ச்சை

ஜி.டி. நாயுடுவின் பெயரில் உள்ள ‘நாயுடு’ என்ற சாதி அடையாளம் குறித்த சர்ச்சை எழுப்பப்படுவது குறித்துப் பேசியவர், “ஜி.டி. நாயுடுவின் பெயர் சாதி கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட வேண்டியது அல்ல. கோபால்சாமி துரைசாமி நாயுடு என்பது அவரது பெயரிலேயே இணைந்துவிட்டது. ராஜகோபாலாச்சாரியார் அல்லது சங்கராச்சாரியார் என்று அழைப்பதைப் போலவே இதுவும் ஒரு விதிவிலக்கு. இதில் விஷமத்தனம் தேடுபவர்களைக் கண்டுகொள்ளத் தேவையில்லை” என்று விளக்கமளித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share