”தம்மை கத்தியால் குத்திய இளைஞர் தமது நிறுவனத்தில் பணிபுரிந்தவர் இல்லை; தமக்கும் அவருக்கும் பணப் பிரச்சனை எதுவும் இல்லை” என்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் வீரா சாமிநாதன் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக நமது மின்னம்பலத்திடம் வீரா சாமிநாதன் கூறியதாவது: வேடசந்தூர் அருகே என் வீட்டுக்கு முன்புதான் அலுவலகம் இருக்கிறது. அங்கு நேற்று இருந்தேன். அங்கே வந்த இளைஞர், கடந்த மூன்று நாட்களாக உங்களுக்கு சால்வை போட முயற்சிக்கிறேன் என்று சொன்னார்.
அதற்கு, நிறைய பேர் வந்து அப்ரோச் செய்யுறாங்க.. சால்வை போடுறாங்களே.. நீங்க எந்த ஊரு தம்பி என விசாரித்தேன்.
எரியோடு அருகே உள்ள மத்தனம்படி, பெயர் மணிகண்டன் என்று சொன்னார்.
மத்தனம்பட்டியில் உள்ள திமுக நிர்வாகியான முத்துப்பாண்டி என் பெரியப்பா மகன்தான் என்றும் அந்த சொன்னார்.
நானும், முத்துப்பாண்டிக்கு போன் செய்து, சால்வை போட வந்தவரைப் பற்றி கேட்டேன்..
முத்துப்பாண்டியும், “ஆமாம்… நம்ம பையன்தான்” என்றார்.
இதனால், சால்வை போட அனுமதித்தேன்.. சால்வை போடும் போது, அந்த பையன் இடுப்பில் லேசாக கை வைத்தான்… நானும் என்னடா என யோசிச்சு விட்டுவிட்டேன்.
அப்போது குளத்தூர் காளனம்பட்டியைச் சேர்ந்த கட்சிக்காரராகிய நாச்சிமுத்து, மருமகள் வளைகாப்புக்காக அழைக்க வந்திருந்தார். அவரிடம் பேசியபடியே சால்வை போட்ட பையனின் செல்போன் எண்ணை பதிவு செய்து போனடித்தேன்.. ரிங் போனது.. ஆனால் போனை அந்த பையன் எடுக்கவில்லை.
”என்னப்பா போன் எடுக்கவில்லையே” என்று கேட்ட போது, ‘சைலண்ட் மோடில் பாக்கெட்டில் இருக்கிறது’ என்று சொன்னார் அந்த இளைஞர்.
அப்போது சட்டென இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் என் கழுத்தை நோக்கி தாக்க முயன்றார். உடனே தலையை குனிந்து கொண்டு இடது கையால் தடுத்தேன்.
பின் வயிற்றில் கத்தியால் குத்த முயற்சித்தார் அந்த இளைஞர்.. ஆனால் கட்சிக்காரரான நாச்சிமுத்து அதைத் தடுக்க அவரது வயிற்றில் கத்திக் குத்து விழுந்தது.
தொடர்ந்து அந்த இளைஞர் என்னை தாக்க முயன்ற போது எனக்கு விலா எழும்பில் கத்திக் குத்து விழுந்தது.
என் வீட்டில் மதுரை பிஎல்ஏ முகவர்கள் மாநாட்டுக்காக 3,000 பேருக்கு உணவு சமைக்கும் பணியில் இளைஞரணி தம்பிமார்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் ஓடி வந்து அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன்.
போலீசார் அந்த இளைஞரிடம் விசாரணை நடத்திய போது, “வீரா சாமிநாதனை மிரட்டினால் பணம் கிடைக்கும் என்பதால் கத்தியால் குத்தினேன்” என கூறியிருக்கிறார். போலீசார் அந்த இளைஞரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க இருக்கின்றனர்.
மின்னம்பலத்தில், ”இச்சம்பவம் தொடர்பாக திமுகவினரிடம் நாம் விசாரித்த போது, “வீரா சாமிநாதன் நடத்தி வந்த நிறுவனம் ஒன்றில் மணிகண்டன் ஏற்கனவே பணிபுரிந்து வந்தார்; பணம் விவகாரம் தொடர்பாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம்” என்றும் கூறுகின்றனர்” என பதிவு செய்திருந்தீர்கள்.
இது உண்மை இல்லை.. அந்த இளைஞரை நான் பார்த்ததே இல்லை; அவர் என் நிறுவனத்தில் பணிபுரியவும் இல்லை. . எந்த பணப் பிரச்சனையும் இல்லை.. இதுதான் உண்மை. இவ்வாறு வீரா சாமிநாதன் கூறினார்.
