விமர்சனம் : வட்டக்கானல்!

Published On:

| By Minnambalam Desk

இயற்கையான போதை பொருளான கஞ்சா மற்றும் போதைக்காளான் அதிகமாக விளையும இடம் கொடைக்கானலில் உள்ள வட்டக்கானல் (கானல் என்றால் காடு ) என்கிறார்கள் படத்தில்.

பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் புழங்கும் இந்தத் தொழிலைக் கைக்குள் வைத்திருக்கும் தாதா ஒருவன் (ஆர் கே சுரேஷ்) அவனது ‘மகன்’களில் ஒருவன் (துருவன் மனோ) முக்கியமானவன் .

ADVERTISEMENT

போதைக் காளான் சிறப்பாக விளையும் நிலம் ஒன்று ஒரு பணக்காரக் குடும்பத்தின் ஒரே வாரிசான வாய் பேச முடியாத ஒரு பெண்ணிடம் (மீனாட்சி கோவிந்தராஜன்) இருக்கிறது .

சிறுவயதில் அப்பாவோடு வாழ்ந்த காலத்தில், இவளுக்கு ஐந்து வயது இருக்கும்போது விபத்து ஒன்று நடக்கிறது. அப்போது, அந்தக் காரிலேயே அப்பா (மனோ) இறந்து விட , இப்போது அந்தக் கார் தாதா மகனிடம் இருக்க, அந்தக் காரை அவள் விலைக்குக் கேட்கிறாள் . தர மறுக்கிறான் தாதாவின் மகன் .அதற்குப் பதிலாக என்ன வேண்டுமானாலும் தருகிறேன் என்கிறாள் . ஆனால் அவன் காரைத் தர மறுக்கிறான் (எப்படி கதை !),

ADVERTISEMENT

ஒரு நிலையில் அவனையே காதலிக்கும் அந்தப் பெண் . அவன் கொண்டு வந்து கொடுத்த காரையே , ‘இனி யாரிடம் இருந்தால் என்ன/?’ என்று அவனிடமே கொடுத்து விடுகிறாள் . அவ்வளவு லவ் !

இதற்குப் பிறகும் அந்தப் பெண்ணிடம் இருந்து அந்த நிலத்தை எப்படியாவது பெற பல ‘திட்டங்கள் ‘ போடுகிறார்கள்… போடுகிறார்கள்… போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

ADVERTISEMENT

ஒரு நிலையில் அந்தப் பெண்ணின் நல்ல எண்ணத்தை அவளது எஸ்டேட்டில் வேலை செய்யும் ஆட்களே தப்பாகப் புரிந்து கொண்டு அந்தப் பெண்ணுக்கு தீங்கிழைக்க, அதன் பின்னணியில் இருப்பவர் யார் என்று தாதாவின் மூத்த மகன் கண்டுபிடிக்க , நடந்தது என்ன என்பதே…

MPR Films மற்றும் Skyline Cinemas சார்பில் மதியழகன், வீரம்மாள் தயாரிக்க, துருவன் மனோ , மீனாட்சி கோவிந்தராஜன், ஆர்.கே சுரேஷ், ஆடுகளம் நரேன், வித்யா பிரதீப் நடிப்பில் பித்தக் புகழேந்தி இயக்கி இருக்கும் படம் வட்டக்கானல்.

பாடகர் மனோவின் மகன்தான் துருவன் . படத்தில் துருவனின் காதலியின் அப்பாவாக , அதாவது மகனின் மாமனார் போல , நடித்துள்ளார் மனோ.

மனோவின் கம்பீரத் தோற்றம் அவருக்கு பிளஸ் . ஆனால் முகத்தில் எந்த உணர்வும் இல்லாமல் இருப்பதால் அவர் முகம் என்னவோ யானைக்கு தாடி வைத்தது போலவே இருக்கிறது .

ஆர் கே சுரேஷ் தனது வழக்கமான பாணியில் ‘நடிடிடிடிடிடிடித்து’ இருக்கிறார்

மீனாட்சி கோவிந்தராஜன் , வித்யா பிரதீப் , ஆடுகளம் நரேன் சிறப்பு.

எம்எம் ஆனந்தின் ஒளிப்பதிவில் படம், முழுக்க கொடைக்கானலில் அழகழகான பின்புலத்துடன் விகசிக்கிறது. வீட்டுக்கு உள்ளே நடக்கும் காட்சிகளில் கூட கொடைக்கானலை உணர வைக்கிறார்கள் .மாரீஸ் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம் .

டான் அசோக் சண்டைக் காட்சிகள் அதிரடி

பேச்சு மாற்றுத் திறனாளிப் பெண் , அவள் ஐந்து வயதில் அந்தக் காரில் கீறி வைத்த ”ஐ லவ் யூ மாம் அண்ட் டாட் ” என்ற வாசகம் இருபது வருடம் ஆகி , அந்தக் கார் துருவனிடம் இருக்கும்போதும் காரில் அப்படியே இருக்கிறது. அதை வேறு அடிக்கடி ஏக்கத்தோடு தடவித் தடவிப் பார்க்கிறாள் . அவன் அதை பார்க்காமல் டைரக்டர் சொன்னபடி வேறு பக்கம் பார்த்துக் கொண்டே நிற்கிறான் . ஹலோ மிஸ்டர் துருவன் . காரை சர்வீஸ் விடறது , எஃப் சி வாங்கறது எல்லாம் செய்யாம இருக்கிறது ரொம்பக் கெட்ட பழக்கம்

கொடைக்கானல் வட்டக்கானல். உலகின் தரமான போதைக் காளான் என்று படம் ஆரம்பித்தபோது , அதன் பின்னால் உள்ள நெட் ஒர்க் , மாபியா, அரசியல் , பணக்காரர்கள் , அதனால் பாதிக்கப்படும் சமுதாயம் என்று , ஒரு வித்தியாசமான பரபரப்ப்பான படம் பார்க்கப் போகிறோம் என்று நிமிர்ந்து உட்கார்ந்தால் வழக்கமான காதல் , அப்பாவிப் பெண் ,அனாதைகள் செண்டிமெண்ட் என்று நிமிர்ந்த நமது தலையை அவர்களே அழுத்திக் குனிய வைக்கிறார்கள் .

சிறு வயதில் அந்தப் பெண்ணும் அவள் அப்பாவும் இருந்த காரை திருப்பிக் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் தருகிறேன் என்று அவள் சொல்லும்போது , ”கார் இந்தா, அந்த நிலத்தை எழுதிக் கொடு…” என்றால் நிலம் வந்திருக்கும்.

அதுதான் இல்லை.. அவள் அவனைக் காதலிக்க ஆரம்பித்த பிறகு கல்யாணம் முடிந்தால் சொத்து எல்லாம் அவர்கள் வசம் வந்து விடும். அப்போது அந்த நிலத்தை எடுத்துக் கொண்டு , அவள் அந்த நிலத்தை யாருக்குக் கொடுக்க நினைக்கிறாளோ அவர்களுக்கு அதே கொடைக்கானலில் வேறு நிலம் கொடுத்து விட்டால் போச்சு . ஏனெனில் அவள் அப்பாவின் நினைவாக வாங்க ஏங்கிய காரையே அவனிடமே விட்டு வைக்கும் அளவுக்கு அவன் மேல் அவள் காதல் கொண்டிருக்கிறாள்.

அதையும் மீறி வித்தியாசமாகக் கதை சொல்கிறேன் என்று தொழிலாளர்களைத் தப்பாகக் காட்டுகிறார்கள் .

கடைசியில் எல்லோரும் எல்லோரையும் வெட்டியோ குத்தியோ அடித்தோ கொலை செய்ய, நம்மை நோக்கி வந்து விடுவார்களோ என்ற பயம் வருகிறது.

வட்டக் கானல் — தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதே தப்பு . அதையும் தப்பாகத் தொட்டால் என்ன செய்வது ?

  • ராஜ திருமகன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share