மயிலாடுதுறை பூம்புகாரில் வன்னியர் சங்கத்தின் மகளிர் மாநாடு ஏற்பாடுகளை பாமக நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாஸ் நேரில் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.
பாமகவில் டாக்டர் ராமதாஸ்- அன்புமணி இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் பாமகவின் பொதுக்குழுவை அன்புமணி நேற்று மாமல்லபுரத்தில் நடத்தினார். இன்று பூம்புகாரில், வன்னியர் சங்க மகளிர் மாநாட்டை டாக்டர் ராமதாஸ் நடத்துகிறார்.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று மனைவி சரஸ்வதி அம்மையார், மகள் காந்தி ஆகியோருடன் பூம்புகார் வந்துவிட்டார் டாக்டர் ராமதாஸ். பூம்புகாரில் மாநாடு நடைபெறும் இடத்தை நேரில் பார்வையிட்ட ராமதாஸ், ஏற்பாடுகள் எப்படி செய்யப்பட்டுள்ளன? என்ன என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
வன்னியர் சங்க மகளிர் மாநாட்டில் மொத்தம் 11,000 நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. மேலும் 5,000 நாற்காலிகள், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மாநாட்டுக்கு 7,000 முதல் 10,000 பெண்கள் வருகை தருவர் என்பது பாமகவினர் எதிர்பார்ப்பு.
மாநாட்டில் பங்கேற்கும் பெண்களுக்காக குடிநீர், கழிப்பறை வசதிகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
இன்று மாலை 3 மணிக்கு கோவலன்- கண்ணகி நாடகத்துடன் வன்னியர் சங்க மகளிர் மாநாடு தொடங்குகிறது. இந்த மாநாட்டில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.
இதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு டாக்டர் ராமதாஸ் சிறப்புரையாற்றுகிறார். இந்த மாநாட்டுக்கு டிஐஜி ஜியாவுல் ஹக், தலைமையில் திருவாரூர் எஸ்பி ஸ்டாலின் உள்ளிட்டோர் தலைமையில் 1,300 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் கடலோர பாதுகாப்புப் படையினர் 70 பேர், ஏடிஎஸ்பி தலைமையில் படகுகளுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பூம்புகார், ஆழ்கடல் பகுதி என்பதால் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.