வழக்கறிஞர் வாஞ்சிதான் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்புமாறு உயர் நீதிமன்ற மதுரைகிளை நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், இன்று ஜூலை 28-ந் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி வழக்கறிஞர் வாஞ்சிநாதன், நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன், ராஜசேகர் அமர்வு முன்பு இன்று (ஜூலை 28) ஆஜரானார்.
அப்போது வாஞ்சிநாதன் ஊடங்களில் அளித்த பேட்டியின் வீடியோவைக் காட்டி, அதன் தலைப்பை படிக்குமாறு கூறினார் நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன்.
அதற்கு வாஞ்சி நாதன், “நான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பிய புகார் குறித்து எழுத்துப் பூர்வமாக விளக்கமளித்து அதனை தாக்கல் செய்துள்ளேன். நீங்கள் கேட்பது வழக்கிற்கு தொடர்பானது இல்லை. ஒரு புதிய வீடியோவை பார்த்து என்னால் விளக்கம் அளிக்க முடியாது. வீடியோ தலைப்புக்கு நான் பொறுப்பில்லை” என்றார்
அப்போது நீதிபதி, “நான் விசாரிக்கவில்லை. உங்கள் மீது கடந்த வெள்ளிக்கிழமை வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீங்கள் அளித்த புகாருக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தான் நீதிமன்றம் கூறுகிறது. நீங்கள் என்னுடைய தீர்ப்பினை விமர்சிப்பதற்கு 100 சதவீதம் உரிமை உள்ளது. அதற்கு நானே ஆதரவு தெரிவிக்கிறேன். ஆனால், ’மதப்பாகுப்பாட்டுடன்’ தீர்ப்பளிப்பதாக குற்றம்சாட்டுவது என்பது வித்தியாசமானது. அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.
எனினும் வாஞ்சிநாதன், ”நீங்கள் கேட்பதை என்னிடம் எழுத்துப்பூர்வமாக கேளுங்கள், என்று கூறியதை அடுத்து வழக்கை மதியம் 2.15 மணிக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஒத்திவைத்தார்.
மதிய இடைவெளிக்கு பிறகு தொடங்கிய வழக்கு விசாரணையின் போதும், எழுத்துப்பூர்வமாக கேள்வி கேட்குமாறு வாஞ்சிநாதன் மீண்டும் கோரிக்கை வைத்தார்.
கொடூரமான குற்றச்சாட்டு!
அதனைத்தொடர்ந்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “எந்த அடிப்படையில் இவ்வாறு ஒரு கொடூரமான குற்றச்சாட்டு நீதிமன்றத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. 24.7.2025 தேதியிட்ட எங்களது உத்தரவில், வாஞ்சிநாதன் அவமதிக்கும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என்றுதான் சொன்னோம். அதில் வாஞ்சிநாதன் உச்ச நீதிமன்றத்தில் புகார் அளித்ததாக எங்கும் எங்களால் குறிப்பிடப்படவில்லை. இந்த வழக்கிற்கும் வாஞ்சிநாதன் உச்சநீதிமன்றத்தில் அளித்ததாக கூறப்படும் புகாருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்துகிறோம்.
சமூக ஊடகங்களில், எங்களில் ஒருவரை சாதி, மத சார்புடையவர் எனக் குற்றம்சாட்டும் வகையில் வாஞ்சிநாதனின் பல பேட்டிகள் பரவி வருகின்றன. உடனடியாக இதை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் பார்வைக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கச் சொல்ல விரும்பவில்லை. நீதிமன்ற கோட்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே, அவரின் ஒரு ஊடக வீடியோ நீதிமன்ற அவையில் ஒளிப்பரப்பட்டது. ஆனால், அந்த வீடியோவில் பேசியதை ஒப்புக்கொள்ள வாஞ்சிநாதன் தயாராக இல்லை. அவர் தனது நிலைப்பாட்டை எழுத்துப்பூர்வமாக ஏற்கனவே விளக்கியுள்ளதாக மட்டுமே மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்” என்றார்.
ஓய்வுபெற்ற நீதிபதிகளின் ஆலோசனை மிகவும் வருந்தத்தக்கது!
மேலும், “இந்த நீதிமன்றத்தில் வாஞ்சி நாதன் குற்றச்சாட்டை மீண்டும் வெளியிடவில்லை. நீதிமன்றம் கேட்ட குறிப்பிட்ட கேள்விக்கும் நேரடியாக பதில் அளிக்கவில்லை. இந்த வழக்கு நீதிமன்றத்தின் முன் நிலுவையில் இருக்கும் நிலையிலும், இந்த நீதிமன்றத்தில் பணியாற்றிய ஓய்வுபெற்ற நீதிபதிகளால் வழங்கப்பட்ட ஆலோசனை மிகவும் வருந்தத்தக்கது. வாஞ்சிநாதன் ஊடகங்கள் முன் கூட்டம் கூட்டி பேசியது மிகுந்த வருத்தத்தக்கதாகும் மற்றும் அது நீதிமன்ற அவமதிப்பாகவே கருதப்படும்.
வாஞ்சிநாதனின் வேண்டுகோளின்படி, இந்த வழக்கின் அனைத்து ஆவணங்களையும், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்குமாறு நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிடப்படுகிறது. அவர் தேவையானதாக கருதினால் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கலாம்” என நீதிபதிகள் அமர்வு பரிந்துரைத்தது.