பக்கம் பக்கமாக பேசுவது எழுதுவதை விட நடிப்பில் ஒரு சில நிமிடங்களில் கடத்தி விட முடியும் என மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது- வனப்பேச்சி எனும் ஒரு சிறப்பான மேடை நாடகத்தின் மூலம்!
பள்ளி மாணவர்கள் ஒரு வன விலங்கு சரணாலயதிற்கு, அழிந்து வரும் மிருகங்கள் பற்றி அறிந்து கொள்ள அழைத்து செல்லப்படுகிறார்கள்.

அங்கு இரு மாணவர்கள் புலி குட்டியின் மீது கல் ஏறிய அது ஒரு பெரிய வடிவமெடுக்கிறது!
அதிலிருந்து கல்வி முறை பற்றி, ஆசிரியர்களின் கையாளும்விதம், பள்ளிகளின் மறு (இருள்?) பக்கம் என விரிந்து, இரு மாணவர்கள் காட்டில் தொலைந்து, தாடகையை சந்திக்க, (ஆம்! ராமாயண தாடகை தான்!), காடுகளின் அழிவு, மனிதர்களின் மூட நம்பிக்கை என மிக நேர்த்தியாக விரிந்து வரலாறு, சமூக, சுற்றுசூழல், அரசியல் என எல்லாவற்றையும் தொட்டு பெரும் செய்தியும் கொடுத்து எல்லோரையும் கட்டிபோடுகிறாள் தாடகை எனும் வனப்பேச்சி!
பிரளயனின் கதை இயக்கத்தில் மிக அருமையாக கையாளப்பட்டுள்ள இந்த வனப்பேச்சி நாடகம், நம்மை பள்ளிக்கும், காட்டுக்கும், ஏன் வரலாறுக்கும் இட்டு சென்று பல விஷயங்ககளை அலசுகிறது. ஆழமாகவும் அழகாகவும்!

humanising and understanding myths- மிக முக்கியம். அப்படி பல புரணங்ககளை இப்படி புரட்டி, கேள்விகள் எழுப்பி, மறு காலந்தாய்வுகள் வருவது முக்கியம். அவை இது போன்ற அருமையான மேடை நாடகமாக வருவது மிக சிறப்பு.
வரலாறு, கதை, புனைவுகள், பொய்கள் என பிரித்து காட்டி, அப்படியே மனித குலத்தின் பேராசைகள், அதன் வளர்ச்சி எனும் மோகத்தில் பேரழிவுகள், என பல தளங்ககளிலும் பீடு நடை.. அதற்கு முண்டாசு பாரதியும் துணைக்கு வருகிறார்.
வரலாற்றில் தவறுகளும், தவறான வரலாறுகளும் உற்று நோக்கப்பட்டு மீள் பார்வைக்கு கொண்டு வரப்படவேண்டும். விவாதிக்க பட வேண்டும்.

“போர் என்பது ஒரு வகை பேச்சு வார்த்தை, பேச்சு வார்த்தை என்பதும் ஒரு போர் முறை தான்”, “ மனிதர்கள் concrete கரப்பான் பூச்சிகள்” “இயற்கையை மனிதன் வென்று விட்டானென்றால் தோற்றது யார்?” “உங்கள் வீட்டுக்கும் பள்ளிக்கும் பயந்து காட்டுக்குள் வந்தீர்களா? அடர் வனத்தை விட பயங்கரமா அவை?” என பல நறுக் வசனங்கள்.

ஆனால் அந்த கரப்பான் பூச்சிக்கும், சின்ன உயிருக்கும் கூட இந்த பூமி சொந்தம், அவர்களுக்கும் முழு உரிமை இங்கு இருக்கிறது என அனாயாசமாக “anthoropocentricity” யை கேள்வி கேட்டு தகர்ப்பது, மண், விதை, காற்று, நீர், சுற்றுசூழல் என எல்லாமும் எல்லாருக்கும் சொந்தம், முக்கியம் என நிலை நிறுத்துவது, காட்டை பாதுகாப்பதின் முக்கியத்துவம், என all facets are covered.

பிரளயனின் / சென்னை கலை குழுவின் பெரும் சிறப்பு அவர்களது கதையும் களமும் மட்டுமல்ல, props எனப்படும் மேடை பொருட்களின் -மிக சில ஐட்டம்கள் மட்டுமே வைத்து பல விஷயங்ககளை -கையாளும் திறன் மிக தனித்துவம் வாய்ந்தது.

இதில் அது வேறு ஒரு தளத்திற்கு எடுத்து செல்லப்பட்டிருக்கிறது. அந்த raised platform – மேடைக்குள் இருக்கும் ஒரு உயர படுகை மிக சிறப்பாக பல இடங்கக்களிலும் கையாளப்பட்டிருக்கிறது.

நாடகங்களில் பறவை, ஆயுதம், போர், என பலதும் உருவாகமாக உபயோகிக்க படும், இங்கு மனிதன் முதற்கொண்டு ஒரு பெரும் லிஸ்டே உள்ளது! ஒவ்வொரு முறையும் கடத்தப்படும் விஷயத்தின் வீரியமும் ஆழமும் மிக அதிகம். வனப்பேச்சி பேரண்டச்சியாக வனத்தை காப்பதையும், மனிதர்கள் எப்படி பேரழிவை உண்டு பண்ணுகிறார்கள், தவசிகளும் வனவாசிகளும் பழங்குடியினரும் எப்படி இயற்கையுடன் இசைந்து வாழ்கிறார்கள் என விளக்குவது சிறப்பு.

குழுவின் அமலா மோகன், கவின் மலர் முதல் ஒவ்வொருவரும் மிக சிறப்பாக மிளிர நடிகை ரோகிணி தாடகையாக, அசத்தி இருக்கிறார். கதையில் என்ன தான் ராட்சசி என்பதற்கு காப்பவள், ரக்ஷிப்பவள் என அழகான விளக்கம் கொடுத்திருந்தாலும் தான் ஒரு நடிப்பு “ராட்சசி ” என நிரூபித்துள்ளார்!.

ஆம் அதெல்லாம் கதை தான், ராமரும் , நானும் கதை தான். ஆனால் இந்த அம்புகள் எல்லாம் நிஜம் என இன்றைய காடுகளின், சுற்று சூழலின் அழிவு, மனிதர்களின் கொடிய ஆட்டம் என அடுக்கி நம்மை நிதர்சனத்துக்கு இழுத்து செல்வது பிரளயனின் வரிகளுடன் ரோகிணியின் நடிப்பும் உச்சரிப்பும் மிக அற்புதம்!

Lighter moments பல தருணங்களிலும் மிக அழகாக மிளிரின. எளிதான ரசிக்கும் படியான ஜோக்குகள், வேடிக்கை காட்சிகள், சுவாரசியங்கள் நிறைந்தே விரிந்தது இந்த வ(வா)னம்.

சென்ற ஞாயிறு 1000 பேருக்கு மேல் இருந்த பார்வையாளர்களை 90 நிமிடங்கள் கட்டிபோட்டு ஆழமாக சிந்ததிக்க வைத்த வனப்பேச்சி நம் நாடு முழுவதும் ஒரு வலம் வர வேண்டும்! முக்கியமாக பள்ளிகளிலும் கல்லூரிகளிலும்..

-அனந்து.
