எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயல்படுவது உகந்ததாக இல்லை. அவர் என்னைத் தனிப்பட்ட முறையில் கட்சிக்கு அழைத்த போதிலும், நான் செல்லத் தயாராக இல்லை. அவருடைய நடவடிக்கைகள் எனக்குப் பிடிக்கவில்லை என்று திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக பார்க்கப்பட்ட வைத்திலிங்கம் அவரது மறைவிற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் தரப்போடு இணைந்து செயல்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று (ஜனவரி 21) வைத்திலிங்கம் தனது ஒரத்தநாடு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். சட்டமன்ற சபாநாயகரை சந்தித்து, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை அவர் வழங்கினார்.
பின்னர் அண்ணா அறிவாலயத்திற்குச் சென்ற வைத்திலிங்கம், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், “எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் செயல்படுவது உகந்ததாக இல்லை. தமிழ்நாடு முதல்வரை தமிழக மக்கள் போற்றுகிறார்கள். எல்லோருடைய தேவைகளையும் பூர்த்தி செய்து மக்களின் மனதில் ஸ்டாலின் இருக்கிறார். அதனால் அண்ணா தொடங்கிய தாய் கழகத்தில் இணைந்துள்ளேன்.அதிமுக சுதந்திரமாக செயல்படவில்லை; சர்வாதிகாரமாக செயல்படுகிறது. கூட்டணி தொடர்பான முடிவில் ஓ.பி.எஸ். தொடர்ந்து காலதாமதம் செய்வதால் திமுகவில் இணைந்துள்ளேன். அதிமுகவில் சேருமாறு தனிப்பட்ட முறையில் எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் தனியாக இணைய விரும்பவில்லை. பிரிந்தவர்கள் ஒன்று சேர வேண்டும் என்ற நோக்கில் நான் அதிமுகவிற்கு செல்லவில்லை” என்று தெரிவித்தார்.
