”ஆகஸ்ட் 15… உங்கள் அறிவிப்புக்காக காத்திருப்போம்” – பிரதமர் மோடியிடம் வைரமுத்து கோரிக்கை!

Published On:

| By Minnambalam Desk

vairamuthu request pm modi for august 15

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து கோரிக்கை வைத்துள்ளார்.

இந்திய நாட்டின் 79ஆவது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பிரதமர் மோடி அன்றைய தினம் செங்கோட்டையில் கொடியேற்றி உரையாற்ற உள்ளார்.

ADVERTISEMENT

பிரதமரின் உரையின் முக்கிய அம்சங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என கூறப்பட்டிருந்த நிலையில் திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள தனது எக்ஸ் பதிவில்,

ADVERTISEMENT

“மாண்புமிகு
இந்தியப் பிரதமர் அவர்களே!

தங்களின்
விடுதலைத் திருநாள் பேருரைக்கு
மக்கள் கருத்துக்கு அழைப்புவிடுத்த
தங்கள் மாண்புக்கு
என் ஜனநாயக வணக்கம்

ADVERTISEMENT

தமிழ்நாட்டிலிருந்து
ஓர் இந்தியனாக எழுதுகிறேன்

தாங்கள்
காலமெல்லாம் போற்றிவரும்
திருக்குறள்
இனம் மொழி மதம் நாடுகடந்த
உலகத்தின் அசைக்கமுடியாத
அறநூல்

மனிதம் என்ற
ஒற்றைக் குறிக்கோளை
உயர்த்திப் பிடிப்பது

அதனை
இந்தியாவின் தேசிய நூலாக
அறிவிக்க வேண்டும் என்பது
தமிழர்களின் நீண்ட கனவு
மற்றும்
நிறைவேறாத கோரிக்கை

இந்தியாவின்
79ஆம் விடுதலைத் திருநாள் பேருரையில்
திருக்குறள்
இந்தியாவின் தேசிய நூலாக
அறிவிக்கப்படும் என்ற நல்லறிவிப்பை
வெளியிட வேண்டுகிறோம்

தாங்கள்
கேட்டுக்கொண்ட வண்ணம்
நமோ செயலியிலும்
இதனைப் பதிவிடவிருக்கிறோம்

இது
உலகப் பண்பாட்டுக்கு
இந்தியா கொடுக்கும் கொடை
என்று கருதப்படும்;
ஆவனசெய்ய வேண்டுகிறோம்

ஆகஸ்ட் 15 அன்று
தொலைக்காட்சி முன்னால்
ஆவலோடு காத்திருப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் பிரதமர் மோடி தமிழகத்தில் சில நிகழ்ச்சிகளில் பேசிய போது திருக்குறளை மேற்கோள் காட்டி உள்ளார். இந்நிலையில் தற்போது வைரமுத்துவின் கோரிக்கையை ஏற்று திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share