தனிப்பெரும்பான்மை பெற்று திமுக ஆட்சி அமைக்கும்போது ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கைகள் எல்லாம் எடுபடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியில் ஒரு தரப்பினர் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையைத் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், “தமிழகத்தில் ஆட்சியில் பங்கு என்பது ஒத்துவராது. இது எங்களுக்கும் தெரியும், காங்கிரஸ் கட்சிக்கும் தெரியும். கூட்டணியை முறிக்க வேண்டும் என்ற நோக்கில் சிலர் சதி செய்ய முயல்கின்றனர்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.இதற்கு மறுப்பாக, ஆட்சியில் பங்கு கோரிக்கையை முன்வைத்து வந்தவர்களில் ஒருவரான மாணிக்கம் தாகூர் எம்பி, “தோழமையில் மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், இன்று திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திமுக கூட்டணியில் காங்கிரஸும், அதிமுக கூட்டணியில் பாஜகவும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கேட்பதைத் திராவிடக் கட்சிகள் எப்படிப் பார்க்கின்றன?” என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “தனிப்பெரும்பான்மை பெற்று திமுக ஆட்சி அமைக்கும்போது இந்தக் கோரிக்கைகள் எல்லாம் எடுபடாது, ஏற்கப்படாது.” என தெரிவித்தார்.
தனி மெஜாரிட்டி கிடைக்காமல் தொங்குச் சட்டசபை வந்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு, ‘கற்பனை வாதங்களுக்கு எல்லாம் வைகோ பதில் சொல்ல மாட்டான்’ என்று தெரிவித்தார்.
