ஈழத் தமிழரை கொடியவர்களாக சித்தரிக்கும் வகையில் தேவரகொண்டா நடித்துள்ள கிங்டம் KINGDOM திரைப்படத்துக்கு தமிழ்நாட்டில் தடை விதிக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.

கிங்டம் திரைப்படத்தை எதிர்ப்பது ஏன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் விவரித்துள்ளார். அதில், அண்மையில் வெளியாகியிருக்கும் கிங்டம் திரைப்படத்தில் ஈழச்சொந்தங்களைக் குற்றப்பரம்பரைபோல, மிகத் தவறாகச் சித்தரிக்கும் வகையிலான காட்சியமைப்புகள் இடம்பெற்றிருக்கிற செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
ஈழத்தமிழர்கள் மலையகத்தமிழர்களை ஒடுக்கினார்களென அத்திரைப்படத்தில் காட்டப்படுவது வரலாற்றுத்திரிபு; மிகப்பெரும் மோசடித்தனம். வரலாற்றில் ஒருநாளும் நடந்திராத ஒன்றை நடந்ததாகக் காட்டி, ஈழச்சொந்தங்களை மிக மோசமாகச் சித்தரிக்கும் இப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என கூறியிருந்தார் சீமான்.

தடை விதிக்க வேல்முருகன் வலியுறுத்தல்
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கையில், “தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகிய கிங்டம் திரைப்படம் கடந்த 31ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகியது. இதில், ஈழத்தமிழர்களின் தலைவன் பெயர் முருகன் என்றும் அங்குள்ள தமிழர்களை கொடியவர்கள் போலவும், தமிழர் தலைவனை அழித்து தேவரகொண்டா ஆட்சி அமைப்பது போன்றும் காட்சிகள் இடம்பெற்றிருப்பது கடும் கண்டத்துக்குரியது.
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த கிங்டம் திரைப்படத்தில், ஈழத்தமிழர்களை குற்றவாளிகள் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழர்களை வன்முறையாளர்களாக சித்தரித்து, முழுக்க முழுக்க உள்நோக்கத்தோடும், தமிழர்கள் மீதான வன்மத்தோடும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
தமிழ் மக்களை வன்முறை வெறியாட்டம் மிகுந்தவர்களாகக் காட்ட செய்ய முயலும், கிங்டம் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வைகோ கோரிக்கை
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், “நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வௌியான தெலுங்கு திரைப்படமான கிங்டம், ஈழத்தமிழர்களை மிக மோசமாக சித்தரித்து காட்டுகிறது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்து சென்றவர்களை ஈழத்தமிழர்கள் அடிமைகள் போலவும் தீண்ட தகாதவர்களாகவும் நடத்துவது போன்று இத்திரைப்படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
வீரம் செறிந்த ஈழ விடுதலைப் போராட்டத்தையும், ஈழத் தமிழர்களையும் தவறாக சித்தரித்து திரைப்படங்கள் வெளியிட்டு வரலாற்றை சிதைக்கின்ற முயற்சி கடும் கண்டனத்திற்குரியதாகும். எனவே தமிழகத்தில் ‘கிங்டம்’ தெலுங்கு திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் போராட்டம்
கிங்டம் படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நாம் தமிழர் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தினர். சில இடங்களில் திரையரங்குகளை முற்றுகையிட்டும் படத்தின் பேனர்களை அகற்றியும் போராட்டம் நடத்தப்பட்டது.
நீதிமன்றத்தில் வழக்கு
இதனிடையே `கிங்டம்’ படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை பெற்றுள்ள எஸ்.எஸ்.ஐ. தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த பட விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியினர் தலையிட தடை விதிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.