2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவிடம் இரட்டை இலக்க தொகுதிகள் கேட்போம் என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் தாம் பேசியதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ விளக்கம் அளித்துள்ளார். MDMK Vaiko Durai Vaiko
மதிமுகவின் நிர்வாக குழுக் கூட்டம் சென்னையில் இன்று ஜூன் 29-ந் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திமுகவிடம் இரட்டை இலக்க தொகுதிகளைக் கேட்போம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாக சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இது சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டன.
இந்த நிர்வாகக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து மதிமுக தலைமையகமான தாயகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, ‘மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் திமுகவிடம் இரட்டை இலக்க தொகுதிகளைக் கேட்போம் என நீங்கள் பேசியது உண்மையா?’ என வைகோவிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டார்.

இதற்கு வைகோ அளித்த பதில்: நான் அப்படி சொல்லவே இல்லையே.. பொய்களைப் பரப்புவதற்கு என ஒரு கூட்டமே இருக்குது. ஒன்றரை மணி நேரம் நடந்த கூட்டத்தில் இரட்டை இலக்கம் என்ற வார்த்தையே என் வாயில் இருந்து வரலையே.. நீங்க எப்படி கேட்கிறீங்க?
ஏங்க..நான் பேசாத ஒன்றை பேசியதாக கேட்கிறீங்களே எந்த அடிப்படையில்? இது உண்மையான்னு கேட்கிறீங்க? யாரோ ஒருத்தன் தெருவில போகிறவன் உளறியிருப்பான்.. அதை கேட்டுகிட்டு நீங்க இங்க கேள்வி கேட்கிறீங்களே? இரட்டை இலக்கம் என்று நான் சொல்லவே இல்லையே.
மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவிடம் செய்தியாளர்கள், “நீங்கள் எத்தனை தொகுதிகளை திமுகவிடம் கேட்பீர்கள்?” என திரும்ப திரும்ப பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு, “தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் வேண்டும் என்றால் 8 சட்டமன்ற உறுப்பினர்களாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும்; அதை நினைத்து 12 தொகுதிகளை திமுகவிடம் கேட்கலாம்; இதுவும் கூட என் முடிவு அல்ல; மதிமுக தலைமை கழகம்தான் முடிவு எடுக்கும் என கூறினார் துரை வைகோ. திமுகவிடம் 12 தொகுதி கேட்போம் என யாரும் யோசிக்கவும் இல்லை.. கேட்கவும் இல்லை. ஒரு உதாரணத்துக்குதான் துரை வைகோ 12 தொகுதிகள் கேட்போம் என சொன்னார். இரட்டை இலக்க தொகுதிகள் கேட்போம் என நான் பேசவே இல்லை என்று சொன்னபிறகும் நீங்கள் ஏன் அப்படி ஒரு கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்கிறீர்கள்? I am very sorry about you. இவ்வாறு வைகோ கூறினார்.

துரை வைகோ விளக்கம்
இது தொடர்பாக செய்தியாளர்கள் கூட்டத்தில் உடனிருந்த துரை வைகோ அளித்த விளக்கம்: என்னிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்ட போது, அதிகமான தொகுதிகளைக் கேட்போம் என்பது அந்தந்த இயக்கங்களின் தொண்டர்கள், நிர்வாகிகள் ஆசை. அதை தப்புன்னு சொல்ல முடியாது; எங்களுக்கு குறைந்தபட்சம் அங்கீகாரம் தேவைன்னு நினைக்கிறோம். அப்படி அங்கீகாரம் வேணும்னா 12 தொகுதிகளில் போட்டி போடனும். ஆனால் இதில் முடிவு எடுக்க வேண்டியது எங்களது இயக்கத் தலைமை என்றுதான் கூறினேன். இவ்வாறு துரை வைகோ விளக்கம் அளித்தார்.