தமிழக முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என அழைத்து விமர்சிக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக விளாசியுள்ளார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற SIR எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வைகோ பேசியதாவது: எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, ஒவ்வொரு குடிமகனும் SIR என்பதை எதிர்க்க வேண்டும்.
பல்லாக்கு தூக்கும் எடப்பாடி.. ஆத்திச்சூடி தெரியாத விஜய்
அடிமைத்தனத்திற்கு நடை பாவாடை விரித்து பல்லாக்கு தூக்குகின்ற எடப்பாடிக்கும் சரி, அரசியல் என்றால் அ, ஆவண்ணாகூட அறியாத, அரிச்சுவடி கூட தெரியாத, ஆத்தி சூடி கூட படிக்காத, நான் திரையுலகத்தில் ஜொலித்தேன். இப்பொழுது மக்களிடம் சென்று ஆட்சியைப் பிடிப்பேன் என்று புறப்பட்டிருக்கின்ற நடிகர் அடுத்து வரப்போவது எங்கள் ஆட்சிதான் என்று இரவு கனவில் உளறுவதைப் போல உளறிக் கொண்டிருக்கிறார்.

கரூரை விட்டு ஓடிந்த வந்த விஜய்
இங்கே திரண்டிருக்கின்ற கூட்டத்தினரைப் பாதுகாக்க சேகர்பாபுவும் மற்றவர்களும் குடிதண்ணீர் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஆம்புலென்ஸ் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். குழந்தைகள், தாய்மார்கள் என்று பெரும் வெள்ளமென பார்ப்பதற்குத் திரண்டவர்களை, ஏழரை மணி நேரம் காக்க வைத்து, குடிதண்ணீருக்கும் ஏற்பாடு செய்யாமல், மருத்துவ வசதி உள்ளிட்ட எந்த ஏற்பாடும் செய்யாமல், பெரும் கூட்டம் வந்து, அடிபட்டு செத்தது என்றால் நமக்கு இன்னும் பெயர் கிடைக்கும் என்று பச்சிளம் குழந்தைகள், தாய்மார்கள் உட்பட 41 உயிர்கள் படு பயங்கரமாக கரூர் வீதியில் செத்து விழுந்தபோது, இந்த மனிதர் 120 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனத்தை திருச்சியை நோக்கி ஓட்டிச் சென்று, அங்கே தங்காமல் சென்னை பட்டினத்துக்கே வந்துவிட்டார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு
ஆனால் நாட்டின் முதலமைச்சரோ, அனைத்துக் கட்சியினருக்கும் நான்தான் முதலமைச்சர். அனைத்து சாதி, மத மக்களுக்கும் நான்தான் முதலமைச்சர். ஜனநாயகம் எனக்கு அந்தப் பட்டயத்தை வழங்கியிருக்கிறது. என் மாநிலத்து மக்கள் என்னுடைய மக்கள். அவர்கள் எதைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை வேதனைப்பட விடமாட்டேன் என காவல்துறை அதிகாரிகளும், மாவட்ட ஆட்சித் தலைவர்களும் கரூருக்குச் செல்லுங்கள். சம்பவ இடங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் செல்லுங்கள் என கூறிவிட்டு, இரவோடு இரவாக அந்த நள்ளிரவு வேளையிலேயே புறப்பட்டுச் சென்று, உயிரற்ற சடலங்களுக்கு மலர் வளையம் வைத்துவிட்டு, மருத்துவர்களுக்குக் கூற வேண்டிய அறிவுரைகளைக் கூறிவிட்டு, உற்றறார் உறவினரின் கண்ணீரைத் துடைப்பதற்கு இரங்கல் தெரிவித்தார். யார் முதலமைச்சர்? அந்த மாநிலத்தின் அனைத்து மக்களின் சுக துக்கங்களிலும் பங்கேற்பவர்தான் ஒரு முதலமைச்சராக இருக்க முடியும். அப்படி ஒரு முதலமைச்சர் என்று நிருபித்தவர் நம்முடைய ஆருயிர் சகோதர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்.
துளியளவு குற்ற உணர்ச்சி இல்லாத விஜய்
இதற்குப் பின்பு சட்டமன்றத்தில் பேசும்போதுகூட, கலை உலகத்திலிருந்து வந்தவர் பெயரையும் உச்சரிக்கவில்லை. அந்தக் கட்சியின் பெயரையும் சொல்லவில்லை. பெரும் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள், உணவு ஏற்பாடுகள், மருந்து ஏற்பாடுகள் அனைத்தையும் அவர்கள்தான் செய்யும் பொறுப்புள்ளவர்கள் என்று கூறினார். அந்த நடிகரின் வேன் ஒரு மைல் நீளத்திற்கு இருக்கிறது. ஒரு தெருவிலிருந்து மற்றொரு தெருவிற்குத் திரும்ப முடியாது. அதில் ஏறி நின்றுகொண்டு, காவல்துறைக்கு என் முதல் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வளவு கூட்டத்திலும் என்னை பத்திரமாக, பாதுகாப்பாகக் கொண்டு வந்து சேர்த்ததற்கு தமிழ்நாடு காவல்துறைக்கு நான் பாராட்டுத் தெரிவிக்கிறேன் என்று கூறினார்.
வரவழைத்து இரங்கல் தெரிவிப்பதா?
நான் ஒரு கிராமத்துக்காரன். வீட்டில் ஒருவர் இறந்துவிட்டால், எல்லோரும் பகை மறந்துவிட்டு அந்த வீட்டிற்குச் சென்று, சடலத்துடன் மயானம் வரை சென்று இரங்கல் தெரிவிப்பது வழக்கம். மறுநாளோ, மூன்றாம் நாளே தொலை தூரத்திலிருந்து வந்தால், இறந்தவரின் படத்திற்கு பூ தூவி இரங்கல் தெரிவிப்பது வழக்கம். நடு கல் நடுவது வழக்கம். ஆனால் இந்த மனிதர் 45 நாள் கழித்து, என்னைப் பார்க்க வாருங்கள் என்று உயிர்ப் பலியானவர்களின் குடும்பத்தினரை வரவழைத்தார். என்னைப் பார்க்க வாருங்கள் என்று ஆண்டவன்கூட சொல்ல மாட்டானே! அப்படி அழைத்து, பணம் கொடுத்துவிட்டு, இறந்துபோனவர்களுக்காக நான் அனுதாபம் தெரிவிக்கிறேன் என்று கூறுகிறார். துளியளவு குற்ற உணர்ச்சி இல்லாமல், அணு அளவும் பொறுப்புணர்ச்சி இல்லாமல், திரைப்படங்களில் வசனம் பேசுவது போன்று மேடையிலும் வசனம் பேசுகிறார்.
என்னய்யா அங்கிள், டிங்கிள்?
“அங்கிள் சொல்லுங்க” என்னய்யா அங்கிள், டிங்கிள். என்ன சினிமாவில் நடிக்கிறாயா? மக்ககள் மன்றத்திற்கு வந்திருக்கிறாய். யாரைச் சொல்கிறாய்? எட்டுக் கோடி தமிழர்களை வழிநடத்தி, உலகுவாழ் தமிழர்கள் உள்ளத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய முதலமைச்சரைப் பார்த்தா சொல்கிறாய்? என்ன நா தடித்தனம் இருந்தால், என்ன மன அழுத்தம் இருந்தால், என்ன அகம்பாவம் இருந்தால் ‘அங்கிள்’ என்று தொடர்ந்து சொல்வாய்?
இருட்டுல நாற்காலி…
ஒரு நல்ல தச்சரை அழைத்து, ஒரு நாற்காலியைச் செய்துதரச் சொல்லி, ஒரு அமாவாசை இருட்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு எதிரே போட்டு அமர்ந்துகொண்டு, செயின்ட் ஜார்ஜ் கோட்டை என் பக்கம் வந்துவிட்டது. நான் இந்த நாட்டுக்கு முதலமைச்சராகிவிட்டேன் என்று வேண்டுனமால் நீ சொல்லலாம். இவ்வாறு வைகோ பேசினார்.
