திடீரென நெஞ்சு படபடக்குதா? கைகள் வியர்க்குதா? காரணமே இல்லாமல் பயம் வருகிறதா? “ரிலாக்ஸ் பண்ணுங்க” என்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால், எப்படி?
இதற்கு மருந்துகள் தேவையில்லை; செலவு செய்ய வேண்டியதில்லை. வெறும் குளிர்ந்த நீரோ அல்லது “ம்ம்ம்ம்…” என்ற முணுமுணுப்போ போதும் என்கிறது 2026-ன் புதிய ஹெல்த் ட்ரெண்ட். சமூக வலைதளங்களில் தற்போது ‘வேகஸ் நரம்புத் தூண்டல்‘ (Vagus Nerve Stimulation) பயிற்சிகள் படு வைரல்!
அது என்ன ‘வேகஸ் நரம்பு’? நமது மூளையில் இருந்து புறப்பட்டு, கழுத்து வழியாக இதயம், நுரையீரல் மற்றும் வயிறு வரை செல்லும் மிக நீண்ட நரம்புதான் இந்த ‘வேகஸ் நரம்பு’.
- இதுதான் நம் உடலின் “அமைதி பட்டன்” (Reset Button).
- கார் ஓட்டும்போது பிரேக் போடுவது போல, இந்த நரம்பைத் தூண்டினால், படபடவென இருக்கும் இதயம் அமைதியாகும்; மன அழுத்தம் (Stress) குறையும்.
இந்த நரம்பை சுவிட்ச் ஆன் செய்ய, இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக்வாசிகள் செய்யும் அந்த 3 விசித்திரமான, ஆனால் பலன் தரும் பயிற்சிகள் இதோ:
1. முணுமுணுத்தல் (Humming): யோகாவில் ‘பிராமரி பிராணாயாமம்’ (வண்டு போல ரீங்காரம் செய்வது) செய்வதைப் பார்த்திருப்பீர்கள். அதுதான் இது!
- முறை: ஆழமாக மூச்சை இழுத்துவிட்டு, மூச்சை விடும்போது வாயை மூடிக்கொண்டு “ம்ம்ம்ம்ம்…” (Hmmmm) என்று சத்தமாக முணுமுணுக்க வேண்டும்.
- அறிவியல்: இந்த அதிர்வு (Vibration) உங்கள் தொண்டை வழியாகச் செல்லும் வேகஸ் நரம்பைத் தட்டி எழுப்புகிறது. இது மூளைக்கு “எல்லாம் பாதுகாப்பாக இருக்கிறது” என்ற சிக்னலை அனுப்பி, மனதை ரிலாக்ஸ் ஆக்குகிறது.
2. முகத்தில் ஐஸ் வாட்டர் (Cold Exposure): பதற்றமாக இருக்கும்போது, ஒரு பாத்திரத்தில் ஐஸ் கட்டிகள் கலந்த குளிர்ந்த நீரை எடுத்து, அதில் முகத்தை சில நொடிகள் முக்க வேண்டும். அல்லது குளிர்ந்த நீரை முகத்தில் விசிறி அடிக்கலாம்.
- அறிவியல்: இதை ‘டைவிங் ரிஃப்ளெக்ஸ்’ (Diving Reflex) என்பார்கள். அதிகக் குளிர் முகத்தில் படும்போது, உடல் தானாகவே இதயத் துடிப்பைக் குறைத்து, உடலை அமைதி நிலைக்குக் கொண்டுவரும்.
3. வாய் கொப்பளித்தல் (Gargling): காலையில் பல் துலக்கும்போது செய்வதுதான். ஆனால், இதைச் சிறிது சத்தமாகவும், நீண்ட நேரமும் செய்ய வேண்டும்.
- தண்ணீர் இல்லாமல்கூட, தொண்டையின் பின்பகுதியில் அதிர்வு ஏற்படும் வகையில் வாய் கொப்பளிப்பது போலச் செய்யலாம். இதுவும் நரம்பைத் தூண்டிவிடும்.
ஏன் இது ட்ரெண்ட் ஆகிறது? இதுவரை மன அழுத்தம் என்றால் மூளையைப் பற்றிக் கவலைப்பட்டோம். ஆனால், “உடலை அமைதிப்படுத்தினால், மனமும் அமைதியாகும்” (Bottom-up processing) என்ற எளிய உண்மையை இந்தப் பயிற்சிகள் நிரூபிப்பதால், இளைஞர்கள் மத்தியில் இது பெரிய ஹிட்டாகியுள்ளது.
அடுத்த முறை ஆபீஸ் டென்ஷனோ, தேர்வு பயமோ வந்தால்… சும்மா ஒரு பாட்டுப் பாடுங்க, அல்லது முகத்தைக் கழுவுங்க… மேஜிக் நடக்கும்!
