‘எஸ்டிடின்னா வரலாறு தானே’ என்று ‘சந்திரமுகி’ வடிவேலு போலக் கேட்கிற நம்மவர்களுக்கு ‘கேன்சர்’ எனும் நோய் குறித்து தெளிவாகத் தெரியும். காரணம், எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளில் வந்த திரைப்படங்கள் தான். அந்த காலகட்டத்தில் திரையில் சோகம் இழையோட வைக்க இயக்குனர்கள் பயன்படுத்திய ஒரு முக்கிய வார்த்தை அது. ஒருகட்டத்தில் அது ‘க்ளிஷே’வாகி போக, பிறகு ‘ப்ரெய்ன் ட்யூமர்’ தொடங்கி விதவிதமான நோய்கள் குறித்து ‘பிஹெச்டி’ செய்யும் அளவுக்குப் போனது திரையுலகம். அந்த வரிசையில் ‘அல்சைமர்’ என்ற நோயையும் சேர்க்கலாம். vadivelu joins with amithab bachchan and mohan lal
மறதி நோய்களில் அல்சைமரும் ஒன்று எனச் சொல்லலாம். நினைவாற்றல், சிந்தனை, நடத்தை, மொழியறிவு, தினசரிச் செயல்பாடு என்று அனைத்திலும் மறதியை உண்டாக்கி, ’நான் யார்’ என்று கேள்வி கேட்கக் கூட முடியாத அளவுக்குக் கொண்டு செல்கிற ஒரு நோய் அது.
சஞ்சய் லீலா பன்சாலியின் ‘ப்ளாக்’ படத்தில் அமிதாப் பச்சன், பிளெஸ்ஸி இயக்கத்தில் ‘தன்மாத்ரா’வில் மோகன்லால், ஹேமந்த் ராவ் இயக்கிய ‘கோதி பன்னா சாதாரண மைகட்டு’ படத்தில் அனந்த் நாக், ராதாமோகன் இயக்கிய அதன் தமிழாக்கமான ’60 வயது மாநிறம்’ படத்தில் பிரகாஷ்ராஜ், அஜய் தேவ்கன் இயக்கிய ‘யூ மீ அவுர் ஹம்’மில் கஜோல் எனப் பல ஜாம்பவான்கள் ‘அல்சைமர்’ நோயால் பாதிக்கப்பட்டவர்களாகத் திரையில் தோன்றியிருக்கின்றனர். அப்படங்கள் எல்லாம் அவர்களது புகழ் கிரீடத்தில் மேலும் ஒரு ரத்தினக்கல் ஆக அலங்கரிக்கின்றன.
’மாரீசன்’ படம் வழியே அந்த வரிசையில் ஒருவராக இணைந்திருக்கிறார் வடிவேலு.
கிருஷ்ணமூர்த்தி எழுத்தாக்கத்தில், சுதீஷ் சங்கர் இயக்கத்தில், யுவன்சங்கர் ராஜா இசையமைப்பில், சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள அப்படத்தில் பகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி.எல்.தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வரும் 25ஆம் தேதியன்று இப்படம் தியேட்டர்களில் வெளியாகிறது.
இதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
ஒரு திருடனாக பகத் பாசிலும் அவரிடம் மாட்டிக்கொள்கிற அல்சைமர் நோயாளியாக வடிவேலுவும் ஒன்றாகச் சேர்ந்து பயணிப்பதாக ‘மாரீசன்’ திரைக்கதை அமைந்திருப்பதை உணர்த்துகிறது இந்த ட்ரெய்லர்.
பகத் பாசிலோடு சேர்ந்து வடிவேலு இந்த படத்தில் ரசிகர்களுக்கு ஒரு ‘மெகா விருந்து’ தரப்போவதாக உணர்த்துகிறது. அந்த ‘கூஸ்பம்ஸ் மொமண்ட்’டுக்கு தான் வெயிட்டிங்..!