நீண்ட போராட்டத்திற்குப் பிறகு திரைக்கு வந்திருக்கிறது கார்த்தியின் ‘வா வாத்தியார்’. வித்யாசமான இயக்குநர் நலன் குமாரசாமி – கமர்ஷியல் ஹீரோ கார்த்தி என்ற கூட்டணி அமைந்தபோதே, இது நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு புது பாய்ச்சலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை இந்த ‘வாத்தியார்’ பூர்த்தி செய்தாரா?
கதைக்களம்: எம்.ஜி.ஆரின் தீவிர பக்தரான தாத்தா ராஜ்கிரண், தன் பேரனை (கார்த்தி) ஒரு கொள்கை வீரனாக, வருங்கால எம்.ஜி.ஆராக வளர்க்கத் துடிக்கிறார். ஆனால், வளர்ந்த பிறகு அந்தப் பேரன் எம்.ஜி.ஆராக இல்லாமல், குணத்தில் ஒரு ‘நம்பியார்’ ஆகத் திரிகிறான். தாத்தா ராஜ்கிரணின் மரணம், அந்த பேரனுக்குள் ஒரு மாற்றத்தை உண்டாக்குகிறது. அவனுக்குள் உறங்கிக்கொண்டிருந்த ‘எம்.ஜி.ஆர்’ விழித்துக்கொள்கிறார்.
உள்ளே எம்.ஜி.ஆர் குணம் தலைதூக்க, வெளியே நம்பியார் குணம் அதை எதிர்க்க… ஒரே உடலுக்குள் நடக்கும் இந்த யுத்தத்தில் யார் ஜெயித்தார்கள் என்பதே கதை.
குழப்பமான முதல் பாதி: படத்தின் மிகப்பெரிய பலவீனமே அதன் முதல் பாதிதான். கார்த்தியை ஒரு இரக்கமற்ற ‘நம்பியார்’ குணம் கொண்டவராகக் காட்ட இயக்குநர் மெனக்கெட்டிருக்கிறார். ஆனால், அதற்காக அவர் அமைத்த காட்சிகளும், அந்தச் சமயத்தில் வரும் பாடல்களும் எதற்காக வருகின்றன என்றே புரியவில்லை. “கேரக்டரை டெவலப் செய்கிறேன்” என்ற பெயரில் வைக்கப்பட்ட காட்சிகள் எதுவும் நம்முடன் ஒட்டவில்லை. பாடல்கள் வேகத்தடையாகவே உள்ளன.
வில்லன் எங்கே? பொதுவாக ஒரு கமர்ஷியல் படத்தில் ஹீரோ எவ்வளவு முக்கியமோ, வில்லனும் அவ்வளவு முக்கியம். இந்தப் படத்தில் மிரட்டலான வில்லனாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சத்யராஜ், சும்மா ஒரு கதாபாத்திரமாக (Character role) வந்து செல்கிறார். அவரைப் போலவே படத்தில் வரும் மற்ற வில்லன்களும் டம்மியாக, வெறும் சைட் கேரக்டர்கள் போலவே வந்து போவது படத்திற்குப் பெரும் பின்னடைவு. கார்த்தியின் அந்த ‘இன்னர் பேட்டில்’ (Inner Battle) கான்செப்ட்டிற்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு வலுவான எதிரி இல்லாதது பெரிய குறை.
நடிப்பு & டெக்னிக்கல்: கார்த்திக்கு இது சவாலான வேடம். எம்.ஜி.ஆராகவும், நம்பியாராகவும் மாற்றி மாற்றி அவர் காட்டும் முகபாவனைகள் சிறப்பு. ராஜ்கிரண் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் கச்சிதமாகச் செய்திருக்கிறார். சத்யராஜ் வீணடிக்கப்பட்டிருக்கிறார். சந்தோஷ் நாராயணனின் இசையும் பெரிதாக கைகொடுக்கவில்லை.
மைனஸ்:
- தெளிவற்ற முதல் பாதி: காட்சிகள் மற்றும் பாடல்களின் நோக்கம் தெளிவாக இல்லை.
- பலவீனமான வில்லன்கள்: சத்யராஜ் உட்பட எதிரிகள் யாரும் மனதில் பதியவில்லை.
- திரைக்கதையில் இருக்கும் மிகப்பெரிய இடைவெளி.
மொத்தத்தில்…
மொத்தத்தில்… கார்த்திக்கு இது ஒரு மாபெரும் ‘கம்பேக்’ படமாக அமைந்திருக்க வேண்டியது. இது நலன் குமாரசாமியின் படமும் இல்லை; கார்த்தியின் வழக்கமான படமும் இல்லை. ஆனால், தடுமாறும் திரைக்கதையால் அந்த வாய்ப்பு நழுவிவிட்டது. ‘வாத்தியார்’ பாடம் எடுக்க வந்தாரா அல்லது பாடம் கற்க வந்தாரா என்பது அவருக்கே வெளிச்சம்!
