உத்தரகாண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கிய கேரளாவைச் சேர்ந்த 28 சுற்றுலா பயணிகளைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் தாராசில் பகுதியில் நேற்று ஆகஸ்ட் 5-ந் தேதி மேகவெடிப்பு ஏற்பட்டு கீர் கங்கா நதியில் பெரும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் ஆற்றின் கரையோர கிராமமே மூழ்கடிக்கப்பட்டது.
இப்பெருவெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் 200க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை 150 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 4 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே உத்தர்காசியில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 28 சுற்றுலா பயணிகள் கதி என்ன என்பது தெரியவில்லை. இந்த 28 பேரையும் தேடும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறுகிறது.
உத்தர்காசியில் இருந்து கங்கோத்ரிக்கு சென்று கொண்டிருந்த நிலையில் அந்த பாதையில் பெரும் வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 28 பேர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.