திருமணம் என்பது இரு மனங்கள் இணையும் ஒரு விழா. ஆனால், இன்றும் பல இடங்களில் அது ஒரு “வியாபாரமாகவே” பார்க்கப்படுகிறது என்பதற்குச் சாட்சியாக உத்தரப் பிரதேசத்தில் ஒரு அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. தாலி கட்டும் நேரத்திற்குச் சற்று முன்பு, மாப்பிள்ளை வீட்டார் 20 லட்சம் ரூபாய் ரொக்கமும், ஒரு காரும் கேட்டதால், மணப்பெண் துணிச்சலாகத் திருமணத்தையே நிறுத்திய சம்பவம் இந்தியா முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.
நடந்தது என்ன? உத்தரப் பிரதேசம் மாநிலம் பரேலி (Bareilly) பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரிஷப் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பே நிச்சயதார்த்தம் முடிந்து, திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தன. பெண் வீட்டார் தங்களால் முடிந்த அளவு நகை, சீர்வரிசை என அனைத்தையும் செய்திருந்தனர்.
நள்ளிரவில் வந்த அதிர்ச்சி: திருமண நாளன்று, மாப்பிள்ளை ஊர்வலம் (Baraat) மண்டபத்திற்கு வர வெகு நேரமானது. இரவு 2 மணியளவில்தான் மாப்பிள்ளை வீட்டார் மண்டப வாசலுக்கே வந்துள்ளனர். ஆனால், உள்ளே நுழைவதற்கு முன்பு, மாப்பிள்ளை வீட்டார் திடீரென ஒரு புது குண்டைத் தூக்கிப் போட்டனர். “எங்களுக்கு இப்போது 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும், ஒரு ‘மாருதி பிரெஸ்ஸா’ (Maruti Brezza) காரும் வேண்டும். அப்போதான் தாலி கட்டுவோம்” என்று அடம்பிடித்தனர்.
கதறிய தந்தை… கொதித்தெழுந்த மகள்: இதைக்கேட்டு மணப்பெண்ணின் தந்தை அதிர்ச்சியில் உறைந்து போனார். “ஏற்கனவே கேட்டதை எல்லாம் செய்துவிட்டோமே, இப்போது திடீரென இவ்வளவு பணத்திற்கு எங்கே போவது?” என்று கெஞ்சிப் பார்த்தார். ஆனால், மாப்பிள்ளை வீட்டார் அதை ஏற்கவில்லை. மாறாக, மணப்பெண்ணின் தந்தையையும், சகோதரரையும் உறவினர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதை உள்ளே இருந்து கவனித்துக் கொண்டிருந்த மணப்பெண் ஜோதி, பொறுமை இழந்தார். நேராக வெளியே வந்தவர், “பணத்துக்காகவும், காருக்காகவும் என் அப்பாவை அவமானப்படுத்தும் இவருடன் நான் வாழ மாட்டேன். எனக்கு இந்தத் திருமணமே வேண்டாம்” என்று முகத்தில் அடித்தாற்போல் கூறிவிட்டார்.
வைரலாகும் வீடியோ: இது குறித்து மணப்பெண் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது. அதில் அவர், “என் அப்பாவையும் அண்ணனையும் எல்லோருக்கும் முன்னாடி அசிங்கப்படுத்தின இவருக்கு, எதிர்காலத்தில் என் மேல என்ன மரியாதை இருக்கும்? வரதட்சணை பிடிக்கும் ஒரு பேராசைக்காரன் எனக்குத் தேவையில்லை” என்று ஆக்ரோஷமாகப் பேசியுள்ளார்.
மாப்பிள்ளை தரப்பு விளக்கம்: இந்த விவகாரம் காவல் நிலையம் வரை சென்றது. ஆனால், மாப்பிள்ளை ரிஷப் இதை மறுத்துள்ளார். “அவங்களுக்குப் பணப் பிரச்சனை இல்லை. நான் குண்டாக இருக்கிறேன் என்று சொல்லி, மணப்பெண்தான் திருமணத்தை நிறுத்தினார். என் மீது பழி போடுவதற்காக வரதட்சணை நாடகத்தை ஆடுகிறார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.
காரணம் எதுவாக இருந்தாலும், மேடை வரை வந்த திருமணத்தை நிறுத்துவதற்கு ஒரு பெண்ணுக்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். “ஊர் என்ன சொல்லும்?” என்று பயப்படாமல், தன் சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொண்ட இந்தப் பெண்ணின் முடிவை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். “கல்யாணம் முக்கியம்தான், ஆனால் தன்மானம் அதைவிட முக்கியம்” என்று நிரூபித்துவிட்டார் இந்தப் பரேலி பெண்!
