ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் தான் அமெரிக்க ஆர்டர்கள் அதிக அளவில் கிடைக்கும். ஆனால் அதிபர் டிரம்ப் இந்திய இறக்குமதி பொருட்களுக்கான வரியை 50 சதவிகிதம் வரை உயர்த்தி உள்ளதால் தொழில் சூடுபிடிக்கும் காலத்தில் கடுமையான சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் 40 சதவிகிதம் அளவிற்கு வேலை இழப்பு அபாயமும் ஏற்பட்டுள்ளது என தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா இந்தியாவின் நட்பு நாடாக பார்க்கப்பட்ட நிலையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பின் இருநாட்டு உறவுகளில் இருந்து வந்த சூழல் கடந்த சில மாதங்களில் கசப்பை சந்தித்து வருகிறது.
குறிப்பாக பாகிஸ்தான் மீதான தாக்குதலின் போது டிரம்பின் கருத்துகளை இந்தியா மறுத்தது. இதனால் இரு நாட்டிற்கும் இடையிலான இடைவெளி அதிகரிக்க துவங்கியது. இந்நிலையில் கடந்த ஜூலை மாத இறுதியில் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரியை அதிபர் டிரம்ப் அறிவித்தார். பின்னர் ஆகஸ்ட் மாத துவக்கத்தில் அதை 50 சதவீதமாக உயர்த்தினார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதே இதற்கு காரணம் என்று தெரிவித்திருத்தார்.
இந்த நிலைமை பேச்சுவார்த்தைகள் மூலம் சீராகும் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில் நேற்றுமுதல் வரி உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதனால் திருப்பூர்,பின்னலாடை மற்றும் ஜவுளித் துறையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என தொழில் துறையினர் அச்சத்தில் உள்ளனர்.
பல நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டன

இது திருப்பூரை சேர்ந்த பின்னலாடை ஏற்றுமதியாளர் பொன்னுசாமி மின்னம்பலத்திடம் கூறுகையில், “அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரி விதிப்பு திருப்பூர் மட்டுமல்லாது இந்தியாவின் அனைத்து தொழிற்துறையினருக்கும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அமெரிக்க மக்களும் பாதிக்கப்படுவர்.
கடந்த வாரத்திலேயே பல்வேறு நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி விட்டன. இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளனர். தற்போது அமெரிக்க இறக்குமதியாளர்கள் இறக்குமதி வரியையும் எங்களையே செலுத்த சொல்கின்றனர்.
இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் பாதிப்படைவர். முன்பு இருந்த 16 சதவீத வரி மற்றும் தற்போது விதிக்கப்பட்டுள்ள 50 சதவீத வரி இரண்டையும் சேர்த்து 66 சதவீத வரியை உள்ளடக்கிய விலையில் பொருட்களை தர வேண்டிய நிலை உள்ளது.
70 சதவீதம் அளவிற்கு விலை உயர்ந்துள்ளது. இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படவில்லையெனில் அமெரிக்க சந்தையை நம்பி இயங்கும் நிறுவனங்கள் பாதிப்பை சந்திக்கும்.
தொழிலாளர்கள் வேலையிழப்பு மற்றும் பொருளாதார இழப்பிற்கு தள்ளப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி அமெரிக்கா இந்தியாவிற்கு 50 சதவீத வரி விதித்துள்ளது. ஆனால் ரஷ்யாவிற்கு வெறும் 10 சதவீத வரியே விதிக்கப்பட்டுள்ளது. நமக்காக ரஷ்யா அமெரிக்காவிடம் பேச வேண்டும். இதை இந்திய அரசு ரஷ்யாவிடம் வலியுறுத்த வேண்டும். அமெரிக்க வரிவிதிப்பின் தாக்கம் நாளை முதல் தான் முழுமையாக தெரியும்” என்றார்.
40 சதவீத தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்

திருப்பூரை சேர்ந்த ஏற்றுமதியாளர் பிரபு ஆனந்த் கூறுகையில், “எங்களது ஏற்றுமதியில் 80 சதவீதம் அமெரிக்காவுக்கு சென்றுகொண்டிருந்தது. அமெரிக்க நிறுவனங்களான வால்மார்ட், டார்கெட், ஜாரா , சீயன்ட் ஆகியவற்றின் விற்பனையில் மூன்றில் ஒரு பங்கு திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகள் தான். திருப்பூரில் 40 சதவீத அளவிற்கு அமெரிக்க ஆர்டர்கள் தான் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. புதிய வரிவிகித உயர்வால் 40 சதவீத பணியாளர்களை பணி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளோம். இந்த முடிவை எடுப்பதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. 3 அமெரிக்க டாலருக்கு தயாரிக்கப்பட்ட டி-சர்ட்டுக்கு 1.5 டாலர் வரி விதிக்கப்படுகிறது. ஒரு டி-சர்ட்டை 3 டாலருக்கு இறக்குமதி செய்த அமெரிக்க நிறுவனம் தற்போது 4.5 டாலருக்கு இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.இதனால் எங்களுக்கு ஆர்டர் தரும் அமெரிக்க நிறுவனங்கள் ஆர்டர்களை நிறுத்திவிடுமாறு கூறிவிட்டன என்றார்.
தொழில் சூடு பிடிக்கும் காலத்தில் சுணக்கம்
மேலும் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் தான் அமெரிக்க ஆர்டர்கள் அதிக அளவில் கிடைக்கும். இந்த நான்கு மாதங்கள் உச்ச ஆர்டர்கள் கிடைக்கும் காலமாகும். ஆடர்களை முடிக்க இரவு, பகல் பாராமல் உழைத்து கொண்டிருப்போம். ஆனால் தற்போது பணிகளை நிறுத்தி விட்டோம். அமெரிக்க நிறுவனங்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கான ஆர்டர்களை நிறுத்திவிட்டன. இந்த சூழல் எப்போது மாறும் எனத்தெரியவில்லை. மத்திய அரசு முயற்சித்தால் இதை மாற்றமுடியும். விரைந்து பேச்சுவார்த்தை நடத்தி அமெரிக்க வரிவிதிப்பில் நிலைத்தன்மையை உருவாக்க வேண்டும். எங்கள் நிறுவனத்தில் 100 பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். தற்போதைய சூழலில் எங்களால் 50 பேரை தான் தக்க வைக்கமுடியும். இதனால் மறுபாதி பணியாளர்களின் சூழல் மோசமடையும் நிலை உள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் குறைவான வரிவிதிப்புள்ள நாடுகளை தேடி சென்று ஆர்டர்களை தரும் வாய்ப்புள்ளது. வரிவிதிப்பு குறைவான நாடுகளுடன் நாம் போட்டியிட முடியாது. அமெரிக்கா தவிர்த்த மற்ற நாடுகளில் நாங்கள் ஆர்டர்களை எடுப்பதற்கான வழிகளை இந்திய அரசு எளிமைப்படுத்தினால் உபயோகமாக இருக்கும்” என்றார்.