அமெரிக்காவின் 50 சதவிகித வரி விதிப்பை நாம் ஒரு சவாலாகவும் பார்க்கலாம். புதிய வாய்ப்பாகவும் பார்க்கலாம் என கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசு, இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை 50 சதவிகிதம் வரை உயர்த்தியுள்ளதால், இந்திய ஏற்றுமதியாளர்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். பின்னலாடை, ஜவுளி, தங்க நகை உள்ளிட்ட ஏற்றுமதித் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள், மத்திய அரசு, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரியைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கோவையில் உள்ள தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க (சைமா) அலுவலகத்தில், பருத்தி இறக்குமதிக்கான 11 சதவிகித வரியை டிசம்பர் வரை ரத்து செய்ததற்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், சைமா தலைவர் சுந்தரராமன், பருத்தி ஜவுளி ஏற்றுமதி குழு உறுப்பினர் ரவி சாம், மற்றும் பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., “இந்திய விவசாயிகளுக்கும் தொழில்துறைக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அமெரிக்க அரசின் இறக்குமதி வரி உயர்வு நாடு முழுவதற்குமான பிரச்சினையாக உள்ளது. இதை ஒரு சவாலாகவும், அதேநேரம் புதிய வாய்ப்பாகவும் பார்க்கலாம். வரி விதிப்பால் ஏற்படும் தாக்கம் எதுவாக இருந்தாலும், அதை எதிர்கொள்ள இந்திய அரசு தயாராக உள்ளது.
நாம் இதைச் சமாளிக்கக்கூடிய சூழலில் உள்ளோம். கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொழில்துறையினரையும் ஒருங்கிணைத்து, முதலில் ஒரு கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்படும்,” என்று தெரிவித்தார்.
