இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று (ஜுன் 7) காலை வெளியிட்ட புதிய எச்சரிக்கையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டு குடிமக்கள் உடனடியாக நாடு விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. us govt offer illegal immigrant to return their country
இந்த அறிவிப்பின் மூலம், அந்நாட்டில் தங்கியுள்ள நபர்களிடையே பயம் ஏற்பட்டாலும், தன்னார்வமாக வெளியேற விரும்புவோருக்கு புதிய நம்பிக்கையும் வழங்கப்பட்டுள்ளது.
தூதரகம் குறிப்பிட்டுள்ளதாவது, தற்போது அமெரிக்கா ஒரு “வரலாற்று வாய்ப்பு” அளிக்கிறது.
இதில், சட்டவிரோதமாக அமெரிக்காவில் இருக்கும் நபர்கள் தங்களது நாட்டிற்கு தன்னார்வமாக திரும்ப விரும்பினால், அமெரிக்க அரசு அவர்களுக்கு நிதி மற்றும் பயண உதவிகளை வழங்கும்.

இது “CBP Home App” என்ற செயலியின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த செயலியில் பதிவு செய்வதன் மூலம், பயணச் செலவுகளுக்கு உதவியாக $1000 (இந்திய மதிப்பில் 85,792.20) ஊக்கத்தொகை, பயண டிக்கெட் ஏற்பாடு மற்றும் தேவையான ஆவணங்களை பெறும் வசதி அளிக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த பிறகு, 21 நாட்களுக்குள் நாடு திரும்பும் ஏற்பாடு செய்யப்படும்.
தன்னார்வமாக வெளியேறும் நபர்கள் எதிர்கால விசா விண்ணப்பங்களில் நல்ல மதிப்பெண்களை பெறலாம் என்றும், அவர்கள் மீது தடுப்பு மற்றும் கைது நடவடிக்கைகள் குறைவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு தகுதி பெறும் நபர்களில், CBP (Border Patrol) அதிகாரிகளால் சந்திக்கப்பட்ட சட்டவிரோத குடிமக்கள் மற்றும் அனுமதி காலாவதியானவர்கள் உள்ளனர்.
மேலும், விண்ணப்பிக்கும் நேரத்தில் நபர் அமெரிக்காவின் முகாமில் இருக்க வேண்டும் என்பதும் முக்கிய நிபந்தனை ஆகும்.
அமெரிக்க முகாம் என்பது அமெரிக்காவின் குடியேற்ற விதிகளை மீறி வந்த அல்லது தங்கியுள்ள நபர்கள் கைது செய்யப்பட்ட பிறகு வைக்கப்படுகிற தற்காலிக காவல் நிலையம் அல்லது தங்குமிடம் ஆகும்.
இதை ICE (Immigration and Customs Enforcement) மற்றும் CBP (Customs and Border Protection) போன்ற அமைப்புகள் நிர்வகிக்கின்றன.

யாரெல்லாம் இங்கு வைக்கப்படுவர்?
அமெரிக்கா வந்ததும் CBP அதிகாரிகள் கைது செய்த நபர்கள்.
விசா காலாவதியானதும் தங்கியுள்ளவர்கள்.
சரியான ஆவணங்கள் இல்லாமல் நாடு கடத்தப்படவிருப்போர்.
குழந்தைகள் உட்பட குடும்பங்களும் சில நேரங்களில் தனித்தனியாக வைக்கப்படுவர்.
எனினும் இத்தகைய முகாம்களில் மக்கள் அடர்த்தி அதிகம், சுகாதார வசதி குறைவு, குழந்தைகள் தாய்–தந்தையர் இருந்து பிரிக்கப்படுவது, நீண்ட நாட்கள் அனுமதியின்றி வைக்கப்படுவது போன்ற முக்கிய பிரச்சனைகள் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன.
சமீபத்தில், விசா காலாவதியானபின் அமெரிக்காவில் தங்கியிருப்போர் மீது கைது, அபராதம் மற்றும் எதிர்கால பயண தடை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், அவர்களுக்கு நிரந்தரமாக அமெரிக்கா பயண தடை ஏற்படும் என்றும் தூதரகம் முன்னதாகவே எச்சரித்திருந்தது.
இந்த நிலையில் அமெரிக்க அரசின் இந்த அறிவிப்பு சட்டவிரோதமாக அமெரிக்க தங்கியுள்ளவர்கள் மத்தியில் சிறிது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.