அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காததால் அரசு நிர்வாகம் முடங்கும் சூழல் உருவாகி உள்ளது.
அமெரிக்காவின் சட்ட நடைமுறைகளின் படி செலவீனங்கள் தொடர்பான மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றால் மட்டுமே அடுத்த ஆண்டுக்கான அரசின் செலவுகளுக்கு தேவையான நிதி அங்கீகரிக்கப்படும். இந்நிலையில் அமெரிக்காவின் மேலவையில் செலவீனங்களுக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு தோல்வி அடைந்துள்ளது. மசோதாவுக்கு ஆதரவாக 55% வாக்குகளும், எதிராக 45% வாக்குகளும் பதிவாகியுள்ளன. இந்த மசோதா நிறைவேற 60% வாக்குகள் தேவை.
ஆனால் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்துள்ள நிலையில், அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் அமெரிக்க நேரப்படி புதன் கிழமை (அக் 1) நள்ளிரவு 12.01 மணி முதல் அத்தியாவசியமற்ற அனைத்து சேவைகளும் நிறுத்தப்படும். இதனால் அத்தியாவசியமற்ற பணிகளில் இருக்கும் அரசு ஊழியர்கள் 7.50 லட்சம் பேர் கடும் பாதிப்புகளை எதிர்கொள்வர். இதன் காரணமாக நாள் ஒன்றுக்கு 400 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இக்கட்டான நிலையில் அரசு ஊழியர்கள் பலர் கட்டாய விடுப்பில் அனுப்பப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் டிரம்பின் கடந்த ஆட்சியில் செலவின மசோதா தோல்வி அடைந்த காரணத்தினால், 35 நாட்கள் வரை அமெரிக்க நிர்வாகம் முடங்கியது.
இதேபோல் கடந்த 2013ம் ஆண்டு ஒபாமா நிர்வாகத்தில் செலவின மசோதா தோல்வி அடைந்த காரணத்தினால் 16 நாட்கள் நிர்வாகம் முடங்கியது குறிப்பிடத்தக்கது.