வெனிசுலா நாட்டில் அமெரிக்க விமானப்படை வான்வெளித் தாக்குதல் நடத்தி உள்ளதால் அந்நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
வெனிசுலா தலைநகர் கராகஸ் மற்றும் மிரண்டா, அராகுவா, லாகுவா உள்ளிட்ட மாநிலங்களில் பொதுமக்கள் குடியிருப்பு மற்றும் ராணுவ கட்டமைப்புகளை குறிவைத்து இன்று (ஜனவரி 3) காலை வான்வெளித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
முன்னதாக போதைப்பொருள் பயங்கரவாதத்தை எதிர்ப்பதாக கூறி அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சில மாதங்களாக வெனிசுலா அரசுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இன்று வெனிசுலாவில் வான்வெளித்தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அமெரிக்க அரசுதான் காரணம். வெனிசுலாவின் இயற்கை வளங்களை அபகரிக்கவே அமெரிக்கா இந்த தாக்கதலில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ குற்றம் சாட்டி உள்ளார்.
இந்த வான் வெளித்தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாக வில்லை. ஆனால் அங்குள்ள சில பகுதிகளில் தீ பற்றி எரியும் வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் உத்தரவின் பெயரில் வெனிசுலா மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தாலும் அமெரிக்க அரசு இதுவரை அதிகார பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
