அமெரிக்காவின் 50 சதவிகித இறக்குமதி வரி உயர்வால் தமிழகத்தில் ஜவுளிப் பொருட்களின் தேக்கம் மற்றும் வேலை இழப்பு போன்ற பிரச்சினைகள் தொடங்கியுள்ளதாக தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத் தலைவர் சுந்தரராமன் தெரிவித்தார்.
கோவையில் உள்ள தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க (SIMA) அலுவலகத்தில், பருத்தி இறக்குமதிக்கான 11 சதவிகித வரியை டிசம்பர் வரை ரத்து செய்ததற்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் இன்று (ஆகஸ்ட் 28) நடைபெற்றது.
இதில், சைமா தலைவர் சுந்தரராமன், பருத்தி ஜவுளி ஏற்றுமதி குழு உறுப்பினர் ரவி சாம், மற்றும் பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதையடுத்து, சுந்தரராமனும், ரவி சாமும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
இந்தியாவில் பருத்தி இறக்குமதிக்கான 11 சதவிகித வரியைக் குறைக்க என கோரிக்கை வைத்திருந்தோம். முதலில், செப்டம்பர் 30, 2025 வரை இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டது. ஆனால், இது போதுமானதாக இல்லை என மத்திய அரசிடம் வலியுறுத்தியிருந்தோம். இந்நிலையில், எங்கள் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு டிசம்பர் 31, 2025 வரை இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது.
பிரதமர் மோடி, நிதியமைச்சர், ஜவுளித்துறை அமைச்சர், வேளாண் அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. மேலும், எங்கள்கோரிக்கைகளை மத்திய நிதியமைச்சரிடம் எடுத்துரைக்க ஏற்பாடு செய்த வானதி சீனிவாசனுக்கும் நன்றி என்றார்.
அமெரிக்காவின் வரி விதிப்பை எதிர்கொள்ளத் தயார்!
ஜவுளித்துறை வேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால், அமெரிக்காவின் 50 சதவிகித இறக்குமதி வரி முறையற்றது. இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு 36 பில்லியன் டாலர் மதிப்பில் ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் ஒரு பகுதி மட்டுமே அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அமெரிக்காவின் வரி விதிப்பால் ஜவுளித்துறை பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு 40 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. உள்நாட்டு வணிகத்தில் 10 சதவிகித வளர்ச்சி ஏற்பட்டாலே இந்தப் பாதிப்பைச் சமாளிக்க முடியும். அமெரிக்காவின் வரி விதிப்பை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். அமெரிக்கா தனக்குத் தேவையான பொருட்களை முழுமையாக வெளிநாடுகளிலிருந்து வாங்க முடியாது; நம்மிடமிருந்து வாங்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்று சுந்தரராமன் தெரிவித்தார்.
முன்பு 25 சதவிகித வரி இருந்தபோது, யாரும் விலைக் குறைப்பு கோரவில்லை. ஆனால், 50 சதவிகித வரி விதிக்கப்பட்டவுடன், வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து, மத்திய அரசு ஆகஸ்ட் 27-க்குப் பிறகு பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தெரிவித்துள்ளது.
அனைத்துத் துறையினரையும் அழைத்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறியுள்ளது. அடுத்த இரண்டு முதல் மூன்று மாதங்களில் அமெரிக்க இறக்குமதி வரி விவகாரம் தீர்க்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
அமெரிக்காவின் 50 சதவிகித வரி உயர்வால், ஜவுளித்துறையில் 70 சதவிகிதம் வரை உற்பத்தி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், ஜவுளிப் பொருட்களின் தேக்கம் மற்றும் வேலை இழப்பு போன்றவை தொடங்கியுள்ளன. இருப்பினும், பருத்தி இறக்குமதி வரி விலக்கு காரணமாக விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றார்.