திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் லிவ் இன் உறவில் ஈடுபடும் பெண்கள், 50 துண்டுகளாக வெட்டப்படுகிறார்கள் என கல்லூரி மாணவிகளிடையே உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆனந்திபென் படேல் வாரணாசியில் உள்ள மகாத்மா காந்தி காசி வித்யாபீடத்தின் 7வது பட்டமளிப்பு விழாவில் நேற்று கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “லிவ்-இன் உறவுகளின் விளைவுகளைப் பார்க்க நீங்கள் விரும்பினால், அனாதை இல்லங்களுக்குச் சென்று பாருங்கள். அங்கு 15 வயது முதல் 20 வயதுக்குட்பட்ட இளம் பெண்கள், தங்கள் கைகளில் ஒரு வயது குழந்தைகளுடன் வரிசையில் நிற்கிறார்கள்.
லிவ்-இன் உறவுகள் தற்போது நாகரீகமாக இருக்கலாம், ஆனால் அதில் ஈடுபட வேண்டாம். லிவ் இன் உறவுகளில் ஈடுபடும் பெண்கள், 50 துண்டுகளாக வெட்டப்பட்டதாக வந்த செய்திகளை கண்டு அதிர்ச்சியடைந்தேன். லிவ் இன் உறவில் ஈடுபட்டால் நீங்களும் 50 துண்டுகளாக வெட்டப்படுவீர்கள்.
ஆண்கள் இளம் பெண்களை ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று, அவர்களுக்கு குழந்தையை கொடுத்துவிட்டு, பின்னர் கைவிட்டு செல்கின்றனர்.. இவை நமது பண்பாடு அல்ல. இதுபோன்ற விஷயங்களுக்கு இரையாகிவிடாமல், உன்னதமான இலக்குகளுக்கு பெண்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும்.
கடந்த 10 நாட்களாக, இது போன்ற வழக்குகள் பற்றிய தகவல்கள் எனக்கு வந்துகொண்டிருக்கின்றன. அவற்றைப் பார்க்கும்போது, நம் நாட்டு பெண்கள் ஏன் இத்தகைய முடிவுகளை எடுக்கிறார்கள் என்று வேதனைப்படுகிறேன்.
பெண்கள் தங்கள் கல்வி மற்றும் சிறந்த இலக்குகளில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வாழ்க்கையைப் பற்றி நீங்களே முடிவெடுங்கள். தவறான முடிவுகளால் பிறந்த வீட்டிலோ அல்லது புகுந்த வீட்டிலோ நிம்மதி இழக்க நேரிடும்” என எச்சரித்தார்.
ஆளுநரின் இந்த பேச்சு சமூகவலைதளங்களில் ஆதரவையும், எதிர்ப்பையும் பெற்று வருகிறது.
ஆனந்திபென்னின் பேச்சு பிற்போக்குத்தனமானது என்றும், லிவ்-இன் உறவுகளில் நடக்கும் குற்றங்களுக்குப் பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றம் சாட்டுவதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே வேளையில் தற்போதைய சமூகத்தில் பெண்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் ஆளுநர் கொடுத்த ஒரு ‘தார்மீக எச்சரிக்கை’ என மற்றொரு தரப்பினர் வாதிட்டு வருகின்றனர்.
முன்னதாக உத்தரபிரதேச மாநிலத்தின் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடனான தனது சந்திப்பின் போது, “லிவ்-இன் உறவுகளுக்குப் பலியாகாமல் தடுக்க மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.