இந்தி திணிப்புக்கு எதிராக சங்கமம்.. 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த ‘தாக்கரே சகோதரர்கள்’!

Published On:

| By Mathi

Thackeray Brothers New

மகாராஷ்டிரா மாநில அரசியலில் 20 ஆண்டுகளாக எதிரும் புதிருமாக இருந்த தாக்கரே சகோதரர்களான சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே இருவரும் ஒரே மேடையில் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்துள்ளது அம்மாநில அரசியலில் மிக முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது. Thackeray Brothers Maharashtra

மகாராஷ்டிராவில் ‘மராத்தி’ தேசியத்தையும் இந்துத்துவா சிந்தனையையும் இணைத்து ‘சிவசேனா’ எனும் அரசியல் கட்சி தொடங்கியவர் பால் தாக்கரே. 1960களில் இருந்தே ‘மராத்தி’யர்களுக்கான காட்பாதராக பால்தாக்கரேவின் சிவசேனா கட்சி இருந்து வருகிறது.

இந்துத்துவா சித்தாந்தத்தை பேசுகிற கட்சி என்பதால் மகாராஷ்டிராவில் இயல்பாகவே பாஜகவின் நட்பு சக்தியாவும் சிவசேனா இருந்து வந்தது. பால்தாக்கரே மறைவுக்குப் பின்னர் அவரது மகன் உத்தவ் தாக்கரே, சிவசேனாவின் தலைவரானார்.

பால் தாக்கரே காலத்திலேயே அவரது தம்பி மகன் ராஜ்தாக்கரே- சிவசேனாவின் அதிரடி முகமாக அறியப்பட்டவராக இருந்தார். தம்மை பால்தாக்கரேவின் அரசியல் வாரிசாக நினைத்துக் கொண்டார். ஆனாலும் உத்தவ் தாக்கரேவையே பெரியப்பா பால்தாக்கரே முன்னிறுத்தி தம்மை ஓரம் கட்டுவதாக அதிருப்தி அடைந்ததால் ராஜ்தாக்கரே, சிவசேனாவை விட்டு வெளியேறி மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவை தொடங்கினார்.

ராஜ்தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா, மராத்தி அல்லாத பிற மொழியினரின் ஆதிக்கத்தை கடுமையாக எதிர்க்கக் கூடியது; மராத்தி மொழியைத் தவிர பிற மொழிகளைத் திணிப்பதையும் எதிர்க்கிறது. மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரேவும் வன்முறைகளை தூண்டும் பேச்சுகளை பேசக் கூடியவர்; இதனால் அவரது கட்சியினரும் மராத்தி அல்லாத பிற மொழி மக்களுக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர்; ஈடுபட்டும் வருகின்றனர்.

பாஜகவுடன் இணைந்திருந்த சிவசேனாவை பாஜகவே இரண்டாக உடைத்தது. பால்தாக்கரே உருவாக்கிய கட்சியின் பெயரும் சின்னமும் பால்தாக்கரே குடும்பத்திடம் இருந்து பறிக்கப்பட்டு ஏக்நாத் ஷிண்டேவிடம் கொடுக்கப்பட்டது. இதனால் உத்தவ் தாக்கரே, பாஜக மீது தீராத கோபத்தில் இருந்து வருகிறார். தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கட்சிகள் இடம் பெற்றுள்ள ‘இந்தியா’ கூட்டணியின் ஒரு அங்கமாக உத்தவ் தாக்கரேவின் சிவசேனா இடம் பெற்றுள்ளது.

இந்த சூழ்நிலையில், மகாராஷ்டிராவில் தற்போது ஆளும் பாஜக கூட்டணி அரசு, இந்தி மொழியை திணிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்தி மொழி திணிப்புக்கு எதிராக உத்தவ் தாக்கரே, ராஜ்தாக்கரே இருவரும் குரல் கொடுத்து வருகின்றனர். இதன் அடுத்த கட்டமாக ஜூலை 5-ந் தேதி இன்று உத்தவ் தாக்கரே, ராஜ்தாக்கரே இருவரும் ஒரே மேடையில் ஒன்றாக தோன்றி இந்தி மொழி திணிப்புக்கு எதிராக ஆவேசமான பேசினர். 20 ஆண்டுகளுக்குப் பின்னர் ராஜ்தாக்கரே- உத்தவ் தாக்கரே இருவரும் ஒரே மேடையில் இணைந்து நின்றது இரு கட்சித் தொண்டர்களையும் பால்தாக்கரேவின் தீவிர விசுவாசிகளையும் கொண்டாட வைத்துள்ளது. இந்த இரு துருவங்களின் சங்கமம், மகாராஷ்டிரா அரசியலில் பாஜகவுக்கு மிகப் பெரும் நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.

இந்த மேடையில் இன்னொரு சுவாரசியமும் நிகழ்ந்தது. உத்தவ் தாக்கரே, ராஜ்தாக்கரே மகன்கள் இருவரும் இந்த மேடையில் ஒரு ஓரமாக நின்றிருந்தனர்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே எம்பி, சட்டென மேடையில் ஓரமாக நின்றிருந்த இருவரையும் கை பிடித்து அழைத்து வந்து உத்தவ் தாக்கரே மகனை ராஜ்தாக்கரே பக்கமும் ராஜ்தாக்கரே மகன் அமித் தாக்கரேவை உத்தவ் தாக்கரே பக்கமும் நிற்க வைக்க அந்த அரங்கமே அதிர்ந்தது.

இந்தி மொழிப்பு திணிப்பு என்ற கிணற்றை வெட்டப் போய், எதிரிகளாக இருந்த உத்தவ் தாக்கரே- ராஜ்தாக்கரே ஆகியோரை கை கோர்த்து நிற்க வைத்துவிட்டு , அய்யோ பூதம் வந்துவிட்டதே என அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது பாஜக என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share