கீழடி அகழாய்வு குறித்த திருத்தப்பட்ட அறிக்கை எதையும் தமிழ்நாடு தொல்லியல் துறையிடமிருந்து இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனம் கோரவில்லை என்று மக்களவையில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பதிலளித்துள்ளார். Keezhadi Dayanidhi Maran
தயாநிதி மாறன் கேள்விகள்
மக்களவையில் திமுக எம்பி தயாநிதி மாறன் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விகள்:
- கீழடி அகழாய்வு தொடர்பான, தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை, இந்தியத் தொல்லியல் துறை திருத்தி அனுப்பச் சொல்வதற்கான, அறிவியல்பூர்வமான காரணங்கள் ஏதும் இருக்கின்றனவா?இந்தியத் தொல்லியல் துறை கேட்ட, திருத்தப்பட்ட அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு, தமிழ்நாடு தொல்லியல் துறைக்கு வழங்கப்பட்ட காலக்கெடு எவ்வளவு?
- 2024ஆம் ஆண்டு. ஜூன் 18ஆம் தேதியில் தொடங்கப்பட்ட 10ஆம் கட்ட அகழாய்வில், ஏற்கனவே ஆறு மண் குழாய்கள் மற்றும் பல்வேறு நகர்ப்புற குடியிருப்பு கட்டமைப்புகள் இருந்ததற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. 10ஆம் கட்ட அகழாய்வில் எஞ்சியிருக்கும் பணிகளை மேற்கொள்ள இந்தியத் தொல்லியல் துறை வழங்கவுள்ள நிதியுதவி பற்றிய விவரங்கள் என்ன?
- வருங்காலங்களில் வைகை நதிக்கரையோர தொல்பொருள் தளங்களில் நடைபெறும் அகழ்வாராய்ச்சிகளில் தமிழ்நாடு தொல்லியல் துறை மற்றும் இந்தியத் தொல்லியல் துறையை ஒருங்கிணைத்து, அறிவியல் ரீதியான உண்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக நிறுவப்படவுள்ள அமைப்பு குறித்த விவரங்கள் என்ன?
மத்திய அமைச்சர் பதில்
இந்த கேள்விகளுக்கு மக்களவையில் கஜேந்திர சிங் ஷெகாவத் அளித்த பதிலில், 2018-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு தொல்லியல் துறை கீழடியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இதற்கு இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனம் நிதியுதவி ஏதும் வழங்கவில்லை. பழங்கால நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருள் இடங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம் 1958 மற்றும் விதிகள் 1959-ன் படி அகழாய்வுக்கு இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனம் அனுமதி அளிக்கிறது.
மாநில தொல்லியல் துறை உட்பட எந்தவொரு முகமையும் தேவையெனக் கோரும்பொழுது தொழில்நுட்ப உதவியும் அளிக்கப்படுகிறது என்றார்.
கீழடி அறிக்கை சர்ச்சை என்ன?
சென்னைக்கு அண்மையில் வருகை தந்த மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், “கீழடி அறிக்கை அறிவியல் அடிப்படையிலும், தொழில் நுட்ப அடிப்படையிலும் நிரூபிக்கப்படவில்லை. கூடுதல் தகவல்களுடன், ஆய்வு முடிவுகளுடன் வரட்டும் என கூறியிருந்தது சர்ச்சையானது.
இதனையடுத்து கீழடி அகழாய்வு தொடர்பாக திருத்தப்பட்ட அறிக்கைகளை மத்திய அரசு கோரியிருந்தது பெரும் சர்ச்சையானது.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், “எத்தனை எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? அத்தனையையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்துப் போராடி, அறிவியல் துணைக்கொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம்! இருந்தும் ஏற்க மறுக்கின்றன சில மனங்கள். திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை” என கூறியிருந்தார்.
இதேபோல தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டிருந்த அறிக்கையில், “கீழடியில் கிடைத்த தொல்பொருட்கள் எல்லாம், தமிழ்நாடு அரசின் வாயிலாக உலகத் தரத்திலான அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தற்போது கீழடி குறித்து உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைத் தெரிவித்த ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் மூலம் மூன்றாம் கட்ட அகழாய்வு குறித்து, ஒன்றிய அரசு கருத்துக் கேட்டிருப்பது ஒன்றிய அரசின் உள் நோக்கத்தை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது. கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.