லடாக் விவகாரங்கள் குறித்து லே உயர்நிலை அமைப்பு (ஏபிஎல்) மற்றும் கார்கில் ஜனநாயகக் கூட்டணி (கேடிஏ) உடனான பேச்சுவார்த்தைக்கு அரசு எப்போதும் தயாராகவே உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், லடாக் அல்லது அது போன்ற எந்தவொரு தளத்திலும் உயர் அதிகாரம் கொண்ட குழு (ஹெச்பிசி) மூலம் ஏபிஎல் மற்றும் கேடிஏ உடனான கலந்துரையாடலை நாங்கள் தொடர்ந்து வரவேற்கிறோம்.
லடாக்கில் ஹெச்பிசி மூலம் ஏபிஎல் மற்றும் கேடிஏ உடன் நடந்த உரையாடல் வழிமுறை இன்றுவரை நல்ல பலன்களை அளித்துள்ளது. இதில், லடாக்கின் பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு இடஒதுக்கீட்டை அதிகரித்தல், லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில்களில் (எல்ஏஹெச்டிசி) பெண்கள் இடஒதுக்கீடு மற்றும் உள்ளூர் மொழிகளுக்கு பாதுகாப்பு வழங்குதல் ஆகியவை அடங்கும். அரசில் 1800 பதவிகளுக்கான பணியமர்த்தல் செயல்முறை ஏற்கனவே லடாக் யூனியன் பிரதேசத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான பேச்சுவார்த்தை எதிர்காலத்தில் விரும்பிய முடிவுகளைத் தரும் என்று நாங்கள் நம்புகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மத்திய அரசுடன் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடத்தமாட்டோம்; இதுவரை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகுகிறோம் என லே உயர்நிலை அமைப்பு அறிவித்திருந்தது.