திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைப் பகுதியில் மாலிப்டினம் (Palani Molybdenum Mining) சுரங்கம் அமைக்கும் முயற்சியை மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு கைவிட வேண்டும் என்று திண்டுக்கல் தொகுதியின் சிபிஎம் எம்பி சச்சிதானந்தம் வலியுறுத்தினார்.
மக்களவையில் திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் பேசியதாவது: திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் மாலிப்டினம் சுரங்க திட்டம் அமைப்பதற்கு ஒன்றிய அரசு முயற்சித்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கரில் மாலிப்டினம் எனும் அரிய வகை தனிமம் இருப்பதை இந்திய புவியியல் ஆய்வு மையம் கண்டறிந்துள்ளது.

பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி, கரடிக்கூட்டம், சத்திரப்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களிலும், அதனைத் தொடர்ந்து உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதிகளான ஐவர் மலை, இடும்பன் மலை, இரவி மங்கலம் ஆகிய ஆன்மீக தலங்களிலும் இந்த ஆய்வு நடைபெற்றிருக்கிறது. இந்த பகுதியில் மாலிப்டினம் சுரங்கம் அமைக்கப்பட்டால் ஆன்மீக தலங்கள் அழிக்கப்படும், இதிகாச முக்கியத்துவம் வாய்ந்த ஐவர்மலை தகர்க்கப்படும், தொல்லியல் சின்னங்கள் தவிடுபொடியாக்கப்படும், விவசாயம் செழித்துள்ள இந்த பகுதி தரிசு நிலமாக மாற்றப்படும் ஆபத்து உள்ளது.
தமிழர்களின் பண்டைய நாகரிகத்தை பற்றிய முக்கியமான தகவல்களைக் கொண்ட கீழடி அகழாய்வு அறிக்கையை ஒன்றிய அரசு திருத்த முயற்சிக்கிறது, மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க முற்பட்டது போல், பழனியிலும் மாலிப்டினம் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு முயற்சித்து வருகிறது.
மக்களுக்கு விரோதமான இத்தகைய நடவடிக்கைகளை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும். ஒரு பக்கம் முருகன் மாநாடு நடத்திக்கொண்டு, மறுபக்கம் முருகன் கோவிலான பழனி மலையை அழிக்க நினைக்கும் ஒன்றிய அரசின் தமிழர் விரோத அரசியலை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு சச்சிதானந்தன் எம்பி பேசினார்.