மத்திய அரசு ஊழியர்கள், புதிய ஒருங்கிணைந்த ஓய்வுத் திட்டத்தை Unified Pension Scheme UPS தேர்வு செய்வதற்கு செப்டம்பர் 30-ந் தேதி கடைசி நாள் என தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய அறிவிப்பாக, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. நடைமுறையில் உள்ள NPS திட்டத்தில் இருந்து இந்த புதிய UPS திட்டத்துக்கு மத்திய அரசு ஊழியர்கள் மாறிக் கொள்ளலாம் எனவும் அறிவித்தது. இந்த புதிய திட்டத்தை தேர்வு செய்ய செப்டம்பர் 30-ந் தேதி கடைசி நாள் என தெரிவித்துள்ளது மத்திய அரசு.
தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டப் பயன்களை மத்திய அரசு ஊழியர்கள் பெறுவது தொடர்பாக பணி வரைமுறை செய்வதற்கான மத்திய குடிமைப் பணிகள் (தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்ட அமலாக்கம்) விதிகள் 2025-ஐ 2.09.2025 அன்று மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை அரசிதழில் வெளியிட்டது.
அரசுப் பணியில் 20 ஆண்டுகள் நிறைவு செய்தபின், விருப்ப ஓய்வு பெறுவதை ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்ட சந்தாதாரர்கள் தெரிவு செய்ய இந்த விதிகள் வகை செய்கின்றன.
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியில் 25 ஆண்டுகள் நிறைவடைந்த பின் மட்டுமே முழுமையான ஓய்வூதியப் பயன்கள் கிடைக்கும். இருப்பினும் 20 ஆண்டுகள் அல்லது அதற்கும் கூடுதலாக பணி நிறைவு செய்து விருப்ப ஓய்வு கோருவோருக்கு முழுமையான ஓய்வூதியப் பயன்கள் 25-ஆல் வகுக்கப்பட்டு சந்தாதாரருக்கு வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.