அமெரிக்காவில் வெளியாகி உலக நாடுகளை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது எப்ஸ்டீன் கோப்புகள்- Epstein files. இதில் பிரதமர் நரேந்திர மோடியின் இஸ்ரேல் பயணம் குறித்து ஒரு இ மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் பெரும் புயலைக் கிளப்பி இருக்கிறது.
அமெரிக்காவின் பெரும் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன், சிறுமிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச் செயல்கள் குறித்த 30 லட்சத்துக்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளின் தொகுப்புதான் எப்ஸ்டீன் ஃபைல்ஸ்.
இதில் பில் கேட்ஸ், டொனால்ட் டிரம்ப் போன்ற உலகப் பிரபலங்கள் பற்றிய தகவல்கள் அடங்கியிருக்கின்றன. இதில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் மீரா நாயரின் பெயரும் எப்ஸ்டீன் ஆவணங்களில் வெளிப்பட்டுள்ளது. 2009 அக்டோபர் 21 அன்று, பிரபல விளம்பரதாரர் பெக்கி சீகல், ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு அனுப்பிய ஒரு மின்னஞ்சலில், மீரா நாயரின் ‘அமீலியா’ படத்திற்கான விருந்து நிகழ்ச்சி கிஸ்லைன் மேக்ஸ்வெல்லின் வீட்டில் நடைபெற்றது என்றும், அதில் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் மற்றும் அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ் போன்றவர்கள் கலந்துகொண்டனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது பிரதமர் மோடியின் 2017-ம் ஆண்டு இஸ்ரேல் பயணம் தொடர்பான சர்ச்சை குறிப்பு இ மெயில் ஒன்றில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை முன்வைத்து பிரதமர் மோடியை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
ஆனால், பிரதமர் மோடி மீதான புகார்களை மறுத்துள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், ”2017 ஜூலையில் பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்தைத் தவிர, மின்னஞ்சலில் உள்ள மற்ற குறிப்புகள் அனைத்தும் குப்பையைப் போன்ற வதந்திகளைவிட சற்றுக் கூடுதலானவை. இதனை புறக்கணிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடி மீதான இத்தகைய குற்றச்சாட்டு இரு சபைகளிலும் பெரும் அமளியை ஏற்படுத்தும்.
யார் இந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்?
அமெரிக்காவின் ஜெஃப்ரி எட்வர்ட் எப்ஸ்டீன், 1953-ம் ஆண்டு ஜனவரி 20-ந் தேதி பிறந்தவர். ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் வங்கி மற்றும் நிதித் துறையில் நுழைந்து பெரும் செல்வாக்கு மிக்கவராக மாறினார்.
அவரது செழிப்பான வாழ்க்கை பாலியல் குற்றச்சாட்டுகளால் இருண்டது. சிறுமிகள் மற்றும் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும், அவர்களைக் கடத்தி மற்றவர்களுக்கு விருந்தாக்கியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. 2008 இல் இக்குற்றங்களுக்காக 13 மாதங்கள் சிறைத்தண்டனை பெற்றவர், மீண்டும் 2019 இல் கைது செய்யப்பட்டார். ஆனால், சிறையில் மர்மமான முறையில் இறந்துபோனார்.
எப்ஸ்டீனின் இறப்புக்குப் பிறகு, அவருடன் தொடர்புடைய சுமார் 30 லட்சம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் “எப்ஸ்டீன் கோப்புகள்-Epstein files.” என்ற பெயரில் அமெரிக்க நீதித்துறையால் வெளியிடப்பட்டு வருகின்றன.
