தமிழகத்துக்கு செயற்கையான நிதி நெருக்கடியை உருவாக்கும் மத்திய அரசு – தங்கம் தென்னரசு விளாசல்

Published On:

| By Mathi

Budget 2026-2027

தமிழ்நாட்டுக்கு செயற்கையான நெருக்கடியை ஒன்றிய அரசு கொடுத்து வருகிறது; எப்போதும் சந்தித்திராத சவால்களை தமிழ்நாடு அரசு சந்தித்து வருகிறது என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டி உள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: 2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில், மொத்த வருவாய் செலவினங்கள் 3 லட்சத்து 93 ஆயிரத்து 272 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2025-26 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் உள்ள 3.79 சதவீத வளர்ச்சி கொண்டதாக இருக்கும்.

ADVERTISEMENT

2025-26 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 57,231 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட மூலதனப் பணிகளுக்கான செலவிடங்கள், திருத்த மதிப்பீடுகளில் 51,443 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் மூலதனச் செலவினம் எதிர்பார்த்ததை விடக் குறைந்துள்ள போதிலும், சென்ற ஆண்டை விட 9.20 சதவீதம் அதிகரித்துள்ளது.

2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 59,562 கோடியாக மூலதனப் பணிகளுக்கான செலவிடங்கள் மதிப்பிடப்பட்டுள்ளது. இது திருத்த மதிப்பீடுகளை விட 15.78 சதவீத வளர்ச்சியை கொண்டதாக இருக்கும்.

ADVERTISEMENT

2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் நிகர கடன் உட்பட மூலதனச் செலவினங்கள் 73,270 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை தெரிவித்து வந்த சரக்குகள் மற்றும் சேவை வரி விகிதங்கள் சீரமைப்பு, ஒன்றிய அரசு பொறுப்பேற்கும் திட்டங்களுக்கான நிதி நிறுத்தி வைக்கப்பட்டது,

ஒன்றிய அரசு நிபந்தனையின்படி தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்திற்கான உயர்த்தப்பட்ட இழப்பீட்டு நிதி வழங்குதல், உத்தரவாத மீட்பு நிதியத்திற்குத் தொகை மாற்றம் செய்தல் போன்ற காரணங்களால் 2025-26 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 41,635 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட வருவாய் பற்றாக்குறை, திருத்த மதிப்பீடுகளில் 69,219 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்ட இந்த நிதி நெருக்கடிகள் மட்டும் இல்லையெனில், இந்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளுக்கு இணங்க நடப்பு நிதியாண்டிற்கான வருவாய் பற்றாக்குறை கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். 2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் வருவாய் பற்றாக்குறை 48,696 கோடி ரூபாயாகக் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2025-26 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 963 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட நிதி பற்றாக்குறை, திருத்த மதிப்பீடுகளில் 1 லட்சத்து 24 ஆயிரத்து 7 கோடி ரூபாயாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக குறிப்பிட்டவாறு ஒன்றிய அரசு மாநில அரசிற்குத் தேவையான ஒத்துழைப்பு வழங்கியிருந்தால் நடப்பு நிதியாண்டு நிதி நிலையின் அளவும் மேம்பட்டுக் காணப்பட்டிருக்கும்.

2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் நிதி பற்றாக்குறை 1 லட்சத்து 21 ஆயிரத்து 949 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 3 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ள நிதி பற்றாக்குறை திருத்த மதிப்பீடுகளில் 3.48 சதவீதமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 3 சதவீதமாகக் குறையும் எனவும் இது மதிப்பிடப்பட்டுள்ளது. இது பொருளாதார வளர்ச்சி மற்றும் நிதிநிலைக்கு விடுக்கப்பட்ட பல்வேறு சவால்களுக்கு இடையிலும் நிதிநிலையை மேம்படுத்துவதில் அரசுக்குள்ள உறுதிப்பாட்டை வெளிகாட்டுகிறது. மாநிலத்தின் நிதிநிலைக்கு வெளியிலிருந்து வேறேதும் காரணிகளால் புதிய சவால்கள் ஏற்படாத நிலையில் இந்த இலக்கு அரசால் எட்டக்கூடிய ஒன்றுதான்.

2025-26 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 9 லட்சத்து 29 ஆயிரத்து 959 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்ட மாநிலத்தின் ஒட்டுமொத்த நிலுவைக்கடன் 25-26 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் 9 லட்சத்து 52 ஆயிரத்து 374 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு ஒன்றிய அரசின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதால் ஒன்றிய அரசின் கணக்கில் இடம்பெற வேண்டிய 9,522.65 கோடி ரூபாயும் இதில் உள்ளடங்கும்.

பல்வேறு தருணங்களில் ஒன்றிய அரசிற்கு மாநில அரசு கோரிக்கை விடுத்த போதிலும் இதற்கான புத்தக வழி சரிசெய்தல் வேலையை நடைபெற வேண்டிய கணக்கு நடைமுறையை ஒன்றிய அரசு மேற்கொள்ளாமல் உள்ளது. இதனால் மாநில அரசின் கடன் செயற்கையாக அதிகரித்து காணப்படுகிறது.

இத்தொகை நீங்கலாக திருத்த மதிப்பீடுகள் நிலுவையில் உள்ள கடன் 9 லட்சத்து 42 ஆயிரத்து 851 கோடி ரூபாயாகவும், 26-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 10 லட்சத்து 62 ஆயிரத்து 848 கோடி ரூபாயாகவும் மதிப்பிடப்பட்டிருக்கிறது. 24-25 ஆம் ஆண்டின் கணக்குகளின்படி 26.39 சதவீதமாக இருந்த சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான கடன் நீங்கலான மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் ஒட்டுமொத்த கடன் விகிதமானது 25-26 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் 26.43 சதவீதமாகச் சற்றே அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 26-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் 26.12 சதவீதமாகக் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share