தவெக தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (செப்டம்பர் 29) கரூர் வருகை தர உள்ளதாக பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.
கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடிகர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலியாகினர். இந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.
கரூர் துயரத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
மேலும் “தமிழ்நாட்டின் கரூரில் நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF) ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50,000மும் நிவாரணமாக வழங்கப்படும்” என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
இந்த பின்னணியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று கரூர் வருகை தர உள்ளதாக தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கரு.நாகராஜன் தமது எக்ஸ் பக்கத்தில், ” மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் கரூர் வருகை தருகிறார் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கிறார்.. உயிரிழந்த குடும்பத்தினருக்கும் வருத்தம் தெரிவிக்கிறார்” என பதிவிட்டுள்ளார்.