ADVERTISEMENT

இளநிலை, முதுநிலை மருத்துவக் கல்விக்கான இடங்களை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Published On:

| By Mathi

Union Cabinet

இளநிலை, முதுநிலை மருத்துவக் கல்விக்கான இடங்களை அதிகரிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

மாநில மற்றும் மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகள், முதுநிலை கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 5,000 முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களை அதிகரிக்கவும் அரசு மருத்துவ கல்லூரிகளில் 5,023 இளநிலை மருத்துவக் கல்வி இடங்களை அதிகரிப்பதற்குமான மத்திய அரசின் நிதியுதவித் திட்டத்தின் 3-ம் கட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த 2 திட்டங்களுக்காக 2025-26-ம் ஆண்டு முதல் 2028-29-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்திற்கு ரூ.15,034.50 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இவற்றில் மத்திய அரசின் பங்களிப்பு ரூ.10,303.20 கோடியாகவும் மாநில அரசின் பங்களிப்பு ரூ.4,731.30 கோடியாகவும் இருக்கும்.

இதன் மூலம் நாட்டில் மருத்துவர்கள் மற்றும் சிறப்பு மருத்துவ நிபுணர்களின் எண்ணிக்கை அதிகரித்து அவர்களுடைய பங்களிப்பு மூலம் சுகாதார தரம் மேம்பட வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

குறிப்பாக கடைகோடி பகுதிகள் இதனால் பயன்பெறும். இந்தியாவில் மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் கற்பதற்கு அதிக வாய்ப்புகள் ஏற்படுதல், உலகளாவிய தரத்திற்கு இணையாக மருத்துவக் கல்வி மற்றும் பயிற்சியின் தரத்தை மேம்படுத்துதல், போதிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் மூலம் இந்தியாவை சுகாதார சேவைக்கான சிறந்த இடமாக திகழச் செய்து அந்நியச் செலாவணியை ஈட்டுதல் உள்ளிட்ட பயன்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share