தமிழ்நாட்டில் பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 46.7 கி.மீ தொலைவுக்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் ரூ.1,853 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது.U nion Cabinet Paramakudi – Ramanathapuram NH 87
இது தொடர்பாக பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தற்போது, மதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி இடையிலான 2-வழி தேசிய நெடுஞ்சாலை எண் 87, அதனுடன் தொடர்புடைய மாநில நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் இந்த நான்கு வழிச் சாலை அமைக்கப்பட உள்ளது. போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதன் காரணமாக குறிப்பாக அதிக மக்கள் தொகை நடமாட்டம் கொண்ட பகுதிகள் மற்றும் வழித்தடங்களில் உள்ள முக்கிய நகரங்களில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், இந்தத் திட்டத்தின்கீழ் பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை எண்-87 இனி 4-வழிச் சாலையாக மேம்படுத்தப்படும். இதன் மூலம் இந்த வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.

மேலும், நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பை உறுதி செய்வதுடன் பரமக்குடி, சத்திரக்குடி, அச்சுந்தன்வயல், ராமநாதபுரம் போன்ற விரைவான வளர்ச்சி கண்டு வரும் நகர்ப்புறங்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் உதவிடும்.
இந்தத் திட்டச் சீரமைப்புப் பணிகள் 5 முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள், (தேசிய நெடுஞ்சாலை-38, 85,36, 536, மற்றும் 32) மற்றும் 3 மாநில நெடுஞ்சாலைகள் (மாநில நெடுஞ்சாலை எண் 47, 29, 34) ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, மாநிலத்தின் தென்பகுதி முழுவதும் ஒரு முக்கிய பொருளாதார, சமூக மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கான முனையங்களுக்கு தடையற்ற போக்குவரத்து இணைப்பை வழங்குகிறது.
கூடுதலாக, இந்த மேம்படுத்தப்பட்ட வழித்தடம் 2 முக்கிய ரயில் நிலையங்கள் (மதுரை மற்றும் ராமேஸ்வரம்), விமான நிலையம் (மதுரை) மற்றும் 2 சிறிய துறைமுகங்கள் (பாம்பன் மற்றும் ராமேஸ்வரம்) ஆகியவற்றுடன் இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் பல்முனை போக்குவரத்து ஒருங்கிணைப்பை உறுதி செய்யும். இந்தப் பகுதிகள் முழுவதும் சரக்கு மற்றும் பயணிகளின் விரைவான போக்குவரத்தை எளிதாக்கும்.
பரமக்குடி – ராமநாதபுரம் இடையே அமைக்கப்பட உள்ள இந்த 4 வழிச்சாலைத் திட்டம் நிறைவடைந்தவுடன், இந்தப் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சி மேம்படுவதுடன் வழிபாட்டு மற்றும் பொருளாதார மையங்களுக்கு இடையிலான இணைப்பையும் வலுப்படுத்த உதவிடும்.
ராமேஸ்வரம், தனுஷ்கோடிக்கு சுற்றுலாவை மேம்படுத்தவும் இது உதவிடும். மேலும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை மேம்பாட்டிற்கான புதிய வாய்ப்புகளுக்கும் இத்திட்டம் வகை செய்யும். இத்திட்டம் 8.4 லட்சம் நேரடி மனித வேலை நாட்களையும் 10.45 லட்சம் மறைமுக மனித வேலை நாட்களையும் உருவாக்கும். மேலும் இதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வளர்ச்சி, மேம்பாடு மற்றும் வளத்திற்கான வாய்ப்புகளும் உருவாகும்.
பிரதமர் மோடி கருத்து
இது தொடர்பாக பிரதமர் மோடி தமது எக்ஸ் பக்கத்தில், ” தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மகத்தான செய்தி! பரமக்குடி – ராமநாதபுரம் பிரிவில் 4 வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுலாவை அதிகரிக்கவும் செய்யும்” என பதிவிட்டுள்ளார்.