ADVERTISEMENT

தன்னம்பிக்கையும் பதற்றமும்: பட்ஜெட் முரண்பாடுகள்!

Published On:

| By Minnambalam Desk

Union Budget 2026-27 discrepancies

சேகர் குப்தா

நிர்மலா சீதாராமன் இதுவரை ஒன்பது பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்துள்ளார். ஆனால், அந்த ஒன்பதில் இந்த பட்ஜெட்டில்தான் அரசியல் ரீதியான கவலைகள் மிகக் குறைவாகத் தெரிகின்றன. அதே சமயம், உலகளாவிய அரசியல் சூழலைக் (Geopolitics) கண்டு இந்தியா பதற்றமாக இருப்பதை இந்த பட்ஜெட் காட்டுகிறது.

ADVERTISEMENT

இந்த முரண்பாடுகளைப் பின்வருமாறு பார்க்கலாம்

சந்தையை அதிரவைத்த நடவடிக்கைகள் 

ADVERTISEMENT

நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் அரசாங்கத்திடம் பல சலுகைகளை எதிர்பார்த்தனர். பணவீக்கம் குறைவாக இருப்பதால், அதிகப் பணத்தை அச்சிடலாம் அல்லது சொத்துகளை விற்று லாபம் பார்க்கலாம் என்று அவர்கள் ஆலோசனை கூறினார்கள். ஆனால், அரசு இதற்கு நேர்மாறாகச் செய்துள்ளது. பங்குச் சந்தையின் வேகத்தைக் குறைக்க, ‘செக்யூரிட்டி டிரான்சாக்‌ஷன் டேக்ஸ்’ (STT) எனப்படும் வரி 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது..

அரசியல் துணிச்சல்

ADVERTISEMENT

இந்த பட்ஜெட்டை ஏன் ‘அரசியல் கவலையற்ற பட்ஜெட்’ என்கிறோம்? ஏனென்றால், நடுத்தர வர்க்கத்தினருக்குப் புதிய சலுகைகளோ, வரி விலக்குகளோ இதில் பெரிய அளவில் இல்லை. இந்த ஆண்டு தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களுக்குக்கூட விசேஷ சலுகைகள் அறிவிக்கப்படவில்லை. இது அரசின் அதீத தன்னம்பிக்கையைக் காட்டுகிறது. 2024 தேர்தலுக்குப் பிறகு இருந்த ஒருவித நடுக்கம் இப்போது அரசிடம் இல்லை. தனது வாக்கு வங்கி அப்படியே இருப்பதாக அரசு நம்புகிறது.

பங்குச் சந்தை சூதாட்டமும் நடுத்தர வர்க்கமும்

Union Budget 2026-27 discrepancies

இந்த பட்ஜெட் தூங்கிக்கொண்டிருந்த பங்குச் சந்தையைத் தட்டியெழுப்பியது உண்மைதான், ஆனால் அது முதலீட்டாளர்கள் எதிர்பார்த்த திசையில் அல்ல. குறிப்பாக ‘F&O’ (Futures and Options) வர்த்தகம் மீதான அரசின் கடுமையான நடவடிக்கை வெறும் பொருளாதார முடிவு மட்டுமல்ல; அது ஒரு தத்துவார்த்த முடிவும்கூட.

நடுத்தர வர்க்கத்தினர் கடினமாக உழைப்பவர்கள், திறமையானவர்கள், ஆனால் பங்குச் சந்தை தந்திரங்களில் அவர்கள் ஏமாந்துவிட வாய்ப்புண்டு. எனவே, அவர்களை அவர்களிடமிருந்தே (அதாவது அவர்களின் பேராசையிடமிருந்தே) பாதுகாக்க வேண்டும் என்று அரசு நினைக்கிறது.

பங்குச் சந்தையில் ‘அல்காரிதமிக் டிரேடிங்’ (Algorithmic Trading) எனப்படும் கணினி வழி வர்த்தகம் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. விலை உயர்ந்த ஆடைகளை அணியும் வெளிநாட்டு ஹெட்ஜ் ஃபண்ட் (Hedge Fund) நிறுவனங்கள், அதிநவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சந்தையை ஆட்டுகின்றன.

உதாரணமாக, வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இந்தியாவில் ஒரு கிளை தொடங்கி, காலையில் ஒரு பங்கின் விலையை மெல்ல உயர்த்தும். பிறகு மதியம் அந்த வெளிநாட்டுத் தாய் நிறுவனம் அந்தப் பங்கை விற்று கோடிக்கணக்கில் லாபம் பார்க்கும். ‘ஜேன் ஸ்ட்ரீட்’ (Jane Street) போன்ற நிறுவனங்கள் இப்படி 10 பில்லியன் டாலர் வரை லாபம் பார்த்த பிறகே அரசு விழித்துக் கொண்டது.

Union Budget 2026-27 discrepancies

பல லட்சம் நடுத்தர வர்க்கத்தினர், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இல்லத்தரசிகள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த ஆயிரக்கணக்கான ரூபாய்களை இழந்துதான், அந்த வெளிநாட்டு நிறுவனங்கள் பில்லியன் கணக்கில் லாபம் பார்க்கின்றன. இதைத் தடுக்க F&O வர்த்தகத்தை மொத்தமாக நிறுத்த முடியாது. ஏனெனில் அது உலகளாவிய நடைமுறை. அதனால், அதன் மீதான வரியை (STT) மூன்று மடங்கு உயர்த்தியுள்ளது அரசு.

அரசு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு (FPIs) ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறது. “உங்களுக்கு இந்தியப் பொருளாதாரத்தின் மீது நம்பிக்கை இருந்தால், நீண்ட கால முதலீட்டாளர்களாக வாருங்கள். அதை விடுத்து, காலை வாங்கி மாலை விற்கும் வியாபாரிகளாக வந்து லாபம் பார்க்க நினைக்காதீர்கள்.” 

கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறியபோது, இந்திய நடுத்தர வர்க்கத்தினர்தான் (SIP மூலம்) சந்தையைத் தாங்கிப் பிடித்தனர். டிசம்பர் 2025 நிலவரப்படி, வெளிநாட்டினரைவிட இந்திய மக்களே தேசியப் பங்குச் சந்தையில் அதிகப் பங்குகளை வைத்துள்ளனர். இப்போது வரி உயர்வு மூலம் அவர்களுக்கு அரசு கொடுத்துள்ள இந்த ‘அதிர்ச்சி’, அவர்களின் நம்பிக்கையைச் சிதைக்குமா? இது மோடி அரசு எடுத்துள்ள ஒரு பெரிய அரசியல் ரிஸ்க்.

உலகளாவிய பதற்றமும் முன்னெச்சரிக்கையும் 

Union Budget 2026-27 discrepancies

விமானத்தில் பயணம் செய்யும்போது மேகமூட்டம் அல்லது அதிர்வு இருந்தால் சீட் பெல்ட்டைப் போடச் சொல்வார்களே, அதே நிலையில்தான் இந்த பட்ஜெட் இருக்கிறது. உக்ரைன் போர் என்னவாகும்? ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் போர் வருமா? டொனால்ட் ட்ரம்ப் என்ன செய்வார்? சீன ராணுவத்தில் நடக்கும் மாற்றங்கள் என்ன? அண்டை நாடுகளான வங்கதேசம், பாகிஸ்தானில் என்ன நடக்கும்?

உலக அளவில் இப்படி ஏகப்பட்ட குழப்பங்கள் இருப்பதால், இந்தியா இப்போதைக்கு ‘ரிஸ்க்’ எடுக்க விரும்பவில்லை. பாதுகாப்புக்காகக் கொஞ்சம் பணத்தை ஒதுக்கி வைத்துக்கொண்டு கவனமாகச் செயல்பட அரசு நினைக்கிறது.

ராணுவ பட்ஜெட்டில் மாற்றம் 

இந்த பட்ஜெட்டின் மிக முக்கியமான அம்சம் ராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி. கடந்த 11 ஆண்டுகளாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.9 சதவீதமாக இருந்த பாதுகாப்புத் துறை நிதி, இப்போது 2 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. முதல்முறையாக ராணுவத்திற்காக ஒதுக்கப்பட்ட முழுப் பணத்தையும் (சுமார் 1.8 லட்சம் கோடி ரூபாய்) ராணுவம் செலவிட்டுள்ளது. கடந்த காலங்களில் செலவு செய்ய முடியாமல் பணத்தைத் திருப்பி அனுப்பிய நிலை இப்போது மாறியிருக்கிறது.

சலிப்பு தரும் ஆறுதல் 

Union Budget 2026-27 discrepancies

இந்த பட்ஜெட், அரசியல் ரீதியாகத் தைரியமாகவும், அதே சமயம் உலகச் சூழலைக் கண்டு மிகவும் எச்சரிக்கையாகவும் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை. இது பார்ப்பதற்குச் சலிப்பாகத் தோன்றலாம். ஆனால், ஒரு வங்கி அதிகாரி எவ்வளவு சலிப்பானவராக (Boring) இருக்கிறாரோ, அவ்வளவு தூரம் உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்பார்கள். இந்த பட்ஜெட்டும் அதுபோலத்தான்.

கட்டுரையாளர்

சேகர் குப்தா, மூத்த ஊடகவியலாளர், அரசியல் விமர்சகர், தி பிரிண்ட் இதழின் ஆசிரியர்.

நன்றி: தி பிரிண்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share